தமிழகம் முழுவதும் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காரணமாக்கி புதிதாக 70 மணல் குவாரிகளை அமைப்பது என முடிவெடுத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக மணல் தேவையை உத்தரவாதப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

அதே சமயம் கடந்த கால அனுபவங்களை கணக்கில் கொண்டு ஆறுகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு. மணல் குவாரிகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை மீறி மணல் கொள்ளையடித்ததன் விளைவாக சுற்றுச்சூழல், ஆற்றின் போக்கு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு ஆறுகளும் வறண்டுபோய் விட்டன. இதனால் குடிநீர் மற்றும் பாசனம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அரசு இவற்றை கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக மணல் கொள்ளையை தொடரும் நோக்கத்தோடு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள மணல் குவாரிகளை அமைக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட செயற்கை மணல் (எம்சாண்ட்) உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவரையிலான மணல் தேவையை பூர்த்தி செய்ய அரசே வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

குடிசைவாழ் ஏழை, எளிய மக்களை வெளியேற்றுவதா?
ஏழை, எளிய மக்களை அவர்களது வசிக்கும் குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தக் கூடிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் சென்னை கூவம் நீர்வழிக் கரையோரம் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளை அப்புறப்படுத்தி அவர்களுடைய வாழ்வாதாரத்தை மாநில அரசு பறித்து வருகிறது. ஏழை, எளிய மக்களை தாங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இவர்களுக்கு மாற்று இடம் என்று கூறி 30 கி.மீ.க்கு அப்பால் இடம் வழங்குவது இந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சென்னை மாநகரில் செய்து வரும் வேலைவாய்ப்பை பறிப்பதோடு, சம்பந்தப்பட்ட குடும்பங்களது குழந்தைகளின் கல்வியையும் பாதிக்கும். குடிசைகளை அப்புறப்படுத்தக் கூடிய இடங்களுக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியும். இதற்கான இடங்கள் உள்ளதை பல்வேறு அமைப்புகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற நகர்ப்புற ஏழை மக்களுக்காக பாடுபடும் கட்சிகளும் அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளன.

தற்போது அரசு கூறும் மாற்று குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காது. ஏற்கனவே கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற இடங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியமர்த்தியதால் மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். ஒரே இடத்தில் குடியமர்த்துவது சரியல்ல என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

சென்னையில் தனியார் பெருநிறுவனங்கள் அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளதை அரசு கண்டுகொள்ளவில்லை. ஏழை, எளிய மக்களை வெளியேற்றுவதில் அரசு குறியாக உள்ளது.

மேற்கண்ட பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு அருகாமையிலேயே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும், பலவந்தமாக அவர்களை வெளியேற்றுவதை கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது.

கந்து வட்டி கொடுமைகளைத் தடுத்து நிறுத்துக!
திரைப்படத் துறையைச் சேர்ந்த அசோக் குமார், அன்புச்செழியனைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் மீண்டும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே தயாரிப்பாளர் ஜீவி இதே போன்ற அதீத வட்டி பிரச்சனை, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதை தமிழகம் சந்தித்தது.

அன்புச்செழியனை பாதுகாக்க முயற்சியா?
சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் மீது உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவரை பாதுகாப்பதற்கு அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. மாநில அரசும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்துகிறது. ஏற்கனவே இத்தகைய கந்து வட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு குடும்பமே தீ வைத்து எரித்துக் கொண்ட கொடுமையைப் பார்த்து தமிழகமே அதிர்ந்தது.

அரசு நிர்வாகத்தின் குறுகிய பார்வை
கொடுமைக்காரர்கள் மீது கறார் நடவடிக்கை என்பதற்கு பதிலாக, ஆட்சியர் அலுவலகத்தின் 4 வழிகளில் மூன்றை அடைப்பது, வருபவர்கள் மண்ணெண்ணெய், பெட்ரோல் கொண்டு வருகிறார்களா என்று சோதிப்பது என்ற குறுகிய பார்வையுடன் தான் அதிகாரிகள் தரப்பில் எதிர்வினை நடக்கிறது. பிரச்சனையின் வேரைக், கிள்ளி எறிவதற்குப் பதிலாக, ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை நடந்து விடக் கூடாது என்று மட்டுமே பார்ப்பது மிக மேலோட்டமான பார்வை.மேலும், அக்குடும்பத்தின் மீது பல்வேறு அவதூறுகள் காவல்துறையின் முதல் கட்ட விசாரணை என்ற அடிப்படையில் வெளியிடப்படுகிறது. ஆட்சியரின் முகநூலிலும் இக்குடும்பம் எவ்வளவு கடன் வாங்கியது, எத்தனை பேரிடம், அதை என்ன செய்தார்கள் என்ற விவரம் வருகிறதே தவிர, இவர்கள் வாங்கிய கடனுக்கு வசூலிக்கப்பட்டது கந்து வட்டியா இல்லையா என்ற அம்சத்துக்குள்ளேயே வர மறுக்கும் நிலையைத் தான் பார்க்கிறோம்.

புகாருக்கான தனி தொலைபேசி எண் கொடுக்கப்பட்ட பிறகு புகார்கள் குவிந்தது என்பது இப்பிரச்சனையின் ஆழத்தையே வெளிப்படுத்துகிறது.

இதற்குப் பின்னும் வேறு சில மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குடும்பங்கள் தற்கொலைக்கு முயன்றது ஊடகங்களில் செய்தியானது. பல மாவட்டங்களில், சுய உதவி இயக்கம் பின்னுக்குப் போய், அதிக வட்டியில் கடன் கொடுக்கும் நுண்நிதி நிறுவனங்களின் சட்ட விரோத நடவடிக்கைகள் ஏழை பெண்களைத் தற்கொலைக்குத் தள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. விவசாயிகள் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அவலமும் தமிழகத்தின் வாடிக்கையாக மாறி விட்டது.

ஏழைகளுக்கு வேறு என்ன வழி?
வாழ்க்கைக்காகவோ, வணிகத்துக்காகவோ கடன் வாங்குவது, இன்றைய சமூக பொருளாதார சூழலில் தவிர்க்க முடியாத நடைமுறையாக மாறி விட்டது. குறைந்த வட்டியில் அரசோ, அதன் நிறுவனங்களோ கடன் கொடுப்பதும், தனியார் கொடுத்தாலும், வட்டிக்கு உச்சவரம்பு விதிப்பதும், கடனை வசூலிக்கப் பயன்படுத்தப்படும் சட்ட விரோத நடைமுறையைத் தடுப்பதும் தான் நிலைமையை சமாளிக்க உதவும்.

ஆனால் கிராமப்புற, நகர்ப்புற அரசு சார்ந்த, கூட்டுறவு அமைப்புகள் கடன் வழங்குவது குறைந்து விட்டது. கந்து வட்டிக்காரர்களின் கடன் வலையில் சிக்குவதைத் தவிர ஏழைகளுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது. 2003ல் நிறைவேற்றப்பட்ட கந்து வட்டித் தடுப்பு சட்டமும், 12 சதவிகிதத்திற்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டமும், கொடுமைகளைத் தடுக்கவில்லை. கந்து வட்டி மாபியா, காவல்துறை, அதிகார வர்க்கத்துக்கிடையில் நிலவும் சுரண்டல் கூட்டணியும், இதற்குக் கிடைக்கும் ஆளும் கட்சியின் ஆசியும் தான் பிரதான காரணம்.

அன்பு செழியன் உள்ளிட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டப்படி கண்டிப்பான நடவடிக்கை எடுப்பது, இவர்களுடன் உறவு வைத்திருக்கும் காவல்துறை, அதிகார வர்க்கத்தினர் மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்வது என்பதுடன், வருகிற புகார்களை உடனுக்குடன் விசாரிக்கிற ஏற்பாட்டினையும் விரைந்து செய்ய வேண்டுமென மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave A Reply

%d bloggers like this: