டி.குமார்,கட்டுரையாளர் : கட்டுமானத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர்.
தமிழ்நாட்டில் கட்டுமானத்தொழிலாளர் நலவாரியத்தில் 27,00,749 பேர் பதிவு செய்துள்ளனர். நலவாரியம் துவங்கப்பட்ட காலத்திலிருந்து 1871 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு சுமார் 20 ஆண்டு காலத்தில் தொழிலாளர்களுக்கு வெறும் 636 கோடி ரூபாய் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. 1996 லேயே அகில இந்திய கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சட்டம் மற்றும் நலவரி சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும் சட்டத்தின் அடிப்படை நோக்கம் தோல்வி அடைந்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான கட்டுமானத் தொழிலாளர்கள் நல சட்டத்தினால் பயனடையவில்லை.நலவரி வசூல் செய்யப்பட்ட தொகையை சரியாக பயன்படுத்துவதில் தொழிலாளர்களுக்கு சென்றடைவதில் உள்ள குறைகளை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியது. மேலும் நலவரியை நல்ல முறையில் பயன்படுத்த ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

தேங்கிக்கிடக்கும் மனுக்கள்..
தமிழக நல வாரியத்தில் அனைத்து மாவட்ட அலுவலகங்களில் திருமண உதவி, ஓய்வூதியம், விபத்து நிதி, இயற்கை மரண உதவி என பணப்பயன்கள் கேட்டு விண்ணப்பித்துள்ள மனுக்கள் ஆயிரக்கணக்கில் தேங்கி உள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

விபத்து மரண நிவாரணம் ரூ.5 லட்சத்தை பணியின் போது விபத்திற்கு உள்ளது போல் எங்கு விபத்து நடந்தாலும் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளி இறந்தாலும் ரூபாய் 5 லட்சம் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட வேண்டும். இயற்கை மரண உதவித் தொகையை ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படும் பிரசவ உதவி நிதி ரூ.18000 போல் கட்டுமான வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண் தொழிலாளர்களுக்கும் ரூ.18000 ஆயிரம் வழங்க வேண்டும். அந்த தொகையை பிரசவத்திற்குப் பின் ஒரே தவணையில் வழங்க வேண்டும். அதே போல் வாரிய முத்தரப்புக் குழுவை புதுப்பிக்க வேண்டும். சிஐடியு அமைப்பிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ள கண்காணிப்புக் கூட்டத்தை மாதாமாதம் முறையாக கூட்ட வேண்டும் ஓய்வூதியம் கேட்டு மனுச் செய்த நாள் முதலாக அரியர்சுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

விஏஓ கையொப்ப நிபந்தனையை ரத்து செய்க
இந்நிலையில் திருமணம், மகப்பேறு, ஓய்வூதிய மனுக்களை வருவாய்த்துறைக்கு அனுப்பி சரிபார்ப்பது என்ற பெயரால் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டப்பட்டு உள்ளது. இதை மாற்றியமைத்து காலக்கெடு நிர்ணயம் செய்து உதவிகள் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) ஒப்பம் பெற வேண்டும் என்ற முடிவை ரத்து செய்ய வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் பிரசவ உதவி 30,000 ஆயிரம். திருமண உதவி ஆண் தொழிலாளிகளுக்கு ரூ.20,000, பெண் திருமண உதவி ரூ.30,000, கருவிகள் வாங்க ரூ.10,000 ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகைகள் என தமிழகத்திலும் பணப்பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும்.

பிரதம மந்திரி காப்பீடு திட்ட (ஜீவஜோதிம்மா யோஜனா , சுரக்ஷா பீமாயோஜனா) ஆண்டு பிரிமியம் 342 ரூபாயில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சரிபாதி பிரிமியம் 171 ரூபாயை வாரியமே செலுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பிற்கு வேட்டு வைக்கும் சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பை மத்திய அரசு வாபஸ் பெற மாநில அரசு வலியுறுத்த வேண்டும். குடும்ப பென்சன் 5 ஆண்டுக்கு மாதம் ரூ.2000 வீதம் வழங்க வேண்டும். வீடு கட்ட மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். தமிழகத்தின் மலைப் பகுதிகளாக உள்ள நீலகிரி மற்றும் அனைத்து மாவட்டங்களுக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தீபாவளிக் காலங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு பண்டிகை போனஸ் வழங்க வேண்டும், வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளிக்கு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க 2 லட்ச ரூபாய்க்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உருவாக்க முன் வர வேண்டும். பதிவு பெற்ற தொழிலாளிக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மாவட்ட அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் அழைத்து வந்தால் அவர்களை நலவாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வைத்து தமிழக முதலமைச்சருக்கு அனைத்து மாவட்டங்களும் கோரிக்கை மனுக்களை அனுப்புவது மற்றும் தொடர் போராட்டம் நடத்துவது என சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

மணல் தட்டுப்பாடும் கொள்ளை விலையும்
அது மட்டுமல்லாமல் கட்டுமானப் பொருட்கள் மற்றும் மணல் விலையேற்றத்தால் கட்டுமான தொழில் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் கட்டிட கட்டுமானத் தொழிலில் வேலை செய்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் மணல் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றத்தால் கட்டுமானப் பணிகள் நடைபெறவில்லை. அதனால் லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது. கட்டுமானத் துறையைச் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் மிகப் பெரிய பாதிப்பு அடைந்துள்ளனர். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
நாட்டின் வளர்ச்சியில் அங்கம் வகிக்கின்ற கட்டுமானத் தொழிலில் மணல் தேவை என்பது பிரதானமானது. தமிழகத்தில் தற்போது அரசே சொந்தப் பொறுப்பில் மணல் குவாரிகளை ஏற்று நடத்துகின்றது. ஆனால் அரசு 2 யூனிட் மணல் ரூ.1080 க்கு கொடுக்கின்றது. வெளிமார்க்கெட்டில் 2 யூனிட் மணல் 30,000 ஆயிரம் வரை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் நிலை உள்ளது. எனவே மாநிலம் முழுவதும் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மூலமாக தரமான எம்-சேண்ட் (மாற்று மணல்) தயாரித்து மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று கட்டுமானத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்துகின்றது, தெலுங்கானா மாநிலத்தை போல் அரசே அனைத்து தாலுக்காகளிலும் மணல் குடோன் அமைத்து குறைந்த விலையில் மணல் விநியோகம் செய்ய வேண்டும்.

இதையொட்டி வருகின்ற 28.11.2017 அன்று தென்சென்னை கிண்டி சிஐடியு அலுவலகத்தில் மணல் பிரச்சனைக்கு தீர்வு காண மாநிலஅளவிலான கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இதில் பொறியாளர் அசோசியேசன் நிர்வாகிகள், காண்ட்ராக்டர்கள் அசோசியேசன் நிர்வாகிகள் தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழக அரசு கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: