திருப்பூர், நவ.24 –
புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜேக்டோ ஜியோ அமைப்பு சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த கனகராஜா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிக்கண்ணா கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மோகன்குமார், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலபொருளாளர் எம்.பாக்கியம், அனைத்துத்துறை ஓய்வுபெற்றோர் சங்க மாவட்டத் தலைவர் க.சண்முகம், டிஏஎன்எஸ் சார்பில் சுந்தரமூர்த்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஏ.அம்சராஜ், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அகமது ஆகியோர் உரையாற்றினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல நூறு பேர் பங்கேற்றனர்.

தாராபுரம்:
தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். இதில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி துரைசாமி, சாலைப்பணியாளர் சங்க கோட்டத்தலைவர் செந்தில்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால்ராஜ், அரசு ஊழியர் சங்க கிளை நிர்வாகிகள் ஈஸ்வரமுர்த்தி, பி.ராஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் மேற்கு வட்ட கிளை தலைவர் ஆர்.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர் கோவிந்தன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.முருகபெருமாள், ஊரக வளர்ச்சி மாநில துணைத்தலைவர் திருவரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேட்டூரில் சிங்கராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் :
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைவர் க.பழனியப்பன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ப.அரிகரன், அங்கன் வாடி பணியாளர் சங்கம் கண்ணகி, பாண்டிமாதேவி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் அர்சுணன், சாலைப்பணியாளர் சங்க என்.தனசேகரன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முத்துக் குமார், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கே.எஸ்.இளங்கோவன் நிறைவுரை ஆற்றினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: