தமிழகத்தில் புதிதாக 70 இடங்களில் மணல்குவாரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள மணல் குவாரிகள் முறையாக இயங்காமல் விதிகளை மீறிச் செயல்பட்டதால் பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். 1990-களுக்கு முன்பு, இந்தத் தொழிலை செய்வதற்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருந்தன. இயற்கை வளங்களை வெட்டி எடுக்கவேண்டும் என்றால் பல இடங்களில் அனுமதி வாங்க வேண்டும், பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த புதிய தாராளமயக் கொள்கை, இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. சட்டத்துக்குப் புறம்பானவையாக இருந்த அனைத்தும் சட்டப்பூர்வமானவையாக மாற்றப்பட்டன. சத்தீஸ்கரின் கனிம நிறுவனங்கள், கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள், தமிழ்நாட்டில் வி.வி.மினரல்ஸ், மணல்கொள்ளை புகழ் சேகர்ரெட்டி என நாடு தழுவியஅளவில் கனிம வளம் பெரும் அளவில் சுரண்டப்பட, இந்தக் கொள்கை மாற்றம்தான் காரணம்.மணல் கொள்ளையில் பெரும் லாப ருசி பார்த்துவிட்ட நிறுவனங்கள், கொள்கை, சட்ட விதிகளுக்கு எல்லாம் உட்பட்டு இயங்குவது இல்லை. உதாரணமாக வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் அதிகப்படியான மணல் எடுக்கப்பட்டதால் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடிநீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

காவிரிஆற்றில் முறைகேடாக மணல் அள்ளிவரும் மணல் குவாரிகளை ரத்து செய்யவேண்டும் என்று கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சி, புகளூர்,தவுட்டுப்பாளையம், தோட்டக்குறிச்சி, நடையனூர் பகுதி மக்களும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். தமிழகத்திலேயே அதிகமாக மணல் கொள்ளை நடப்பது இம் மாவட்டத்தில்தான் என்கிறார்கள்.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில்பாய்ந்தோடும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணிக் கரையோரங்களிலும், ஆற்றுக்குள்ளும் தூர்வாருவதாகக் கூறி அளவுக்கு அதிகமாக மணலைச் சுரண்டி விட்டனர். இதனால் எதற்கும்பயன்படாத பள்ளமாகி அந்த இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. மணல் ஏற்றிச் சென்ற லாரிகளைப் பல முறை மக்கள்சிறைபிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த மணல் கொள்ளைக்கு முழுக்காரணமே தமிழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்தான். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே அதிமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆசியுடன் பாலாற்றில் மணல் கிடங்கே செயல்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் இதில் புரள்வதால்மணல்கொள்ளையர்களும் ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டு இயற்கை வளத்தைக் கூறுபோடுவதை இனியும் அனுமதிக்கப்போகிறோமா? தமிழக அரசு உத்தேசித்துள்ள புதியகுவாரிகள் இயற்கை வளத்தை மேலும் சுரண்டவே உதவும். எனவே அரசு தனது முடிவைக் கைவிட்டு ஏற்கெனவே உள்ள மணல்குவாரிகளை முறையாகவும் நேர்மையாகவும் நடத்த முன்வரவேண்டும். விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகிறதா என்பதை வருவாய்த்துறையினர் அடிக்கடி கண்காணிக்கவேண்டும்.

Leave A Reply

%d bloggers like this: