கவுகாத்தி;
ஒருவர் முன்ஜென்மத்தில் செய்த பாவத்திற்காக தண்டனையாகவே, அவர்களுக்கு மறுஜென்மத்தில் புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களை கடவுள் ஏற்படுத்துவதாக, பாஜக தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உளறிக் கொட்டியுள்ளார்.இவர் பாஜக மாநிலத் தலைவர் மட்டுமல்ல; அசாம் மாநில சுகாதாரத்துறைக்கே அமைச்சர் இவர்தான். அதுமட்டுமல்ல, நிதித்துறை மற்றும் கல்வித்துறைக்கும் இவர்தான் அமைச்சர். மூன்று முக்கியமான துறைகளைக் கையில் வைத்திருப்பவர்.

அந்த வகையில், அசாம் தலைநகரம் கவுஹாத்தியில் கடந்த 21-ஆம் தேதி ஆசிரியர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் ஹிமந்தா பிஸ்வா சர்மா அதில் கலந்துகொண்டார். அப்போதுதான் முன்வினைப் பயன் குறித்து நீண்ட உரையை நிகழ்த்தியுள்ளார்.

“இந்துக்கள் கர்மா (முன்வினைப்பயன்) மீது நம்பிக்கை உடையவர்கள்; அதனால், தற்காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், கர்மாவுக்கும் தொடர்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது” என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.“நாம் பாவம் செய்ததால் கடவுள் நம்மை வேதனை அடையச் செய்கிறார்; இளம் வயதுடையவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதையும், விபத்தில் சிக்குவதையும் நாம் பார்த்திருப்போம், அவர்களின் கடந்த காலத்தை ஆய்வு செய்தால், அவர்கள் செய்த பாவத்திற்கு கடவுள் கொடுக்கும் தண்டனையாகவே அது அமைந்திருக்கும் என்பதை அறியலாம்; வாழ்நாளில் அல்லது நமது முந்தைய வாழ்க்கையில் அந்த இளைஞன் எதுவும் செய்யவில்லை என்றாலும் அவரது தந்தை அல்லது தாய் ஏதோ தவறு செய்திருந்தார் என்றாலும், செய்த பாவங்களுக்கு நாம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.

யாரும் இந்த தெய்வீக நியதியிலிருந்து தப்பிக்க முடியாது; மக்கள் செய்த பாவங்களால் ஏற்படும் வினையை தடுக்க முடியாது” என்றும் கன்னா பின்னாவென்று உளறிக் கொட்டியுள்ளார்.

மேலும், “தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்திற்கு கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் அதிக சம்பளம் பெற்றும் கடுமையாக உழைப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ள ஹிமந்தா சர்மா, “நீதி என்பது எங்கும் உள்ளது; முன் ஜென்ம பாவத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றும் ஆசிரியர்களை மிரட்டியுள்ளார்.புற்றுநோய் தொற்றுநோய் அல்ல; அது பாவம் மற்றும் சாபத்தால் வருவதும் அல்ல; ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடையலாம் என்பதே சுகாதாரத்துறையின் பிரச்சாரமாக இருக்கிறது.
ஆனால், சுகாதாரத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரே, புற்றுநோய் வருவதற்கு முன்ஜென்மத்தில் அவரவர் செய்த பாவம்தான் காரணம் என்று கூறியிருப்பது மருத்துவர்களையும், புற்றுநோயாளிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பாஜக அமைச்சரின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்களும் எழுந்துள்ளன. ஹிமந்தாவின் பேச்சு, சொரணையற்றதாகவும், புற்றுநோயாளிகளின் மனதைப் புண்படுத்தும் நோக்கிலும் இருக்கிறது, இதற்காக அமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான டிபப்ராட்டா சைக்கியா கூறியுள்ளார். பாஜக-வில் சேர்ந்தால் இப்படித்தான் பேச வேண்டியது இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரமும் ட்டிவிட்டரில் சாடியுள்ளார்.ஹிமந்தா சர்மா, 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். நான்கு முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டுதான் காங்கிரசில் இருந்து பாஜக-வுக்குத் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.