வாஷிங்டன்;
2018-ஆம் ஆண்டில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்கப் புவியியலாளர்கள் கூட்டமைப்பின் வருடாந்தரக் கூட்டம் வாஷிங்டனில் அண்மையில் நடைபெற்றது. இதில் கொலராடோ பல்கலைக்கழக பேராசிரியர் ரோஜர் பில்ஹம், பென்ரிக் பல்கலைக்கழக பேராசிரியை ரெபேக்கா ஆகியோர் சமர்ப்பித்த ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துப் பேசினர்.

அப்போது, 1900-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் பதிவான நிலநடுக்கங்களை ஆய்வுசெய்ததில், குறிப்பிட்ட 5 காலகட்டங்களில் ஆண்டுக்கு 25 முதல் 30 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும், இதர காலகட்டங்களில் ஆண்டுக்கு 15 நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்துள்ளதாக ரோஜர் பில்ஹமும், ரெபேக்காவும் தெரிவித்துள்ளனர்.மேலும், “எப்போதெல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைந்ததோ அப்போது அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன; எங்களது ஆய்வின்படி பூமியின் சுழற்சிக்கும் நிலநடுக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், தற்போது பூமியின் சுழற்சி வேகம் சிறிது குறைந்துள்ளதாகவும்; இதன் காரணமாக ஒரு நாளின் கால அளவு ஒரு மில்லி விநாடி அளவுக்குக் குறைந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

புவி சுழற்சியின் இந்த வேகக் குறைவை, அணு கடிகாரங்கள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்று கூறியுள்ள அவர்கள், “சுழற்சி வேகம் குறைந்திருப்பதால் பூமிக்கடியில் மிகப்பெரிய அளவில் சக்தி வெளிப்படும்; இதனால் வரும் 2018-ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கணிப்பு வெளியிட்டுள்ளனர்.“இந்த ஆண்டு இதுவரை ரிக்டர் அலகில் 7 புள்ளிகளுக்கு மேல் 6 நிலநடுக்கங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன; ஆனால் அடுத்த ஆண்டில் 20 நிலநடுக்கங்கள் வரை ஏற்படலாம்; இந்த நிலநடுக்கங்கள் பூமியின் எந்தப் பகுதியில் ஏற்படும் என்பதைக் கணிக்க முடியாது; எனினும் இந்த நிலநடுக்கங்கள் பூமத்திய ரேகைப் பகுதியில் ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன” என்றும் ஆய்வறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.