சென்னை;
இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி, கொடி, தலைமை அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் அணிக்கே தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது என்றாலும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சின்னம் கிடைத்து விட்டதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இன்று பிற்பகல் 2 மணியளவிலேயே தேர்தல் ஆணையம் தனது முடிவை வெளியிட்டது. ஆனால், பிற்பகல் 1.30 மணிக்கே இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைத்து விட்டது என்று சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
‘இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பு வழங்கியிருக்கிறது; தேவையான ஆதராங்களை நாங்கள் அளித்த அடிப்படையில் ஆய்வு செய்து இந்த நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்; இது ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் அவர் கூறினார்.

அவருக்கு சற்று முன்பே, பிற்பகல் 1.15 மணியளவில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும், “இரட்டை இலை சின்னம் ஒபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது, தர்மத்திற்கு கிடைத்த வெற்றி” என்றார்.

இது ஊடகங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிற்பகல் 1.45 மணியளவில் டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தல் ஆணையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், ஒபிஎஸ் அணிக்குத்தான் இரட்டை இலை ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எப்படி கூறினார்? என்று கேள்வி எழுப்பினார். மேலும், ‘தேர்தல் ஆணையர் முதல்வருக்கு மட்டும் போன் மூலமாக கூறினாரா?’ என்றும் கேட்ட அவர், ஒருவேளை அப்படி ஒரு தீர்ப்பை அளித்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் கூறினார்.இன்னொரு புறத்தில் டிடிவி தினகரன் ஆதரவு வழக்கறிஞரான செந்தூர் பாண்டியன், முதல்வரின் பேட்டி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் உடனடியாக புகார் மனுவையும் அளித்தார்.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவசர அவசரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், பத்திரிகையாளர்கள் தெரிவித்த உறுதியான கருத்து அடிப்படையிலேயே மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தேன் என்று விளக்கம் அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: