“சார், உங்க பையன் ஒன்னு கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒன்றை உளறுகிறான். கொஞ்சம் கண்டிச்சு வைங்க” என்று ஆசிரியர் கூறியதும், “அப்படியா! நிச்சயமா ஒருநாள் அவன் அமைச்சரா வருவான் பாருங்க” என்று மகிழ்ச்சியுடன் கூறினாராம் தந்தை!வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்கத் தெர்மாக்கோல் அட்டைகளை மிதக்கவிட்ட அரிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெறவிருக்கும் அமைச்சரால் நாம் அடைந்துள்ள பெருமை வானிலும் பரந்தது.

“நான் மட்டும் சளைத்தவனா” என்று களத்தில் இறங்கினார் மற்றோர் அமைச்சர். ஆற்று நீரில் நுரை வெள்ளமாய்ப் பொங்கி வருகிறதே என்று மக்கள் கவலைப்பட்டபோது “வீடுகளில் சோப்பு பயன்படுத்துவதால் வரும் நுரையே இது” என்று உடனடியாக விடை பகர்ந்து தம் மேதைமையை வெளிச்சம்போட்டுக் காட்டினார்.“ஆதாரத்துடன் பேசுபவனாக்கும் நான்” என்று கம்பீரமாகக் கைகளில் தனியார் நிறுவனப் பால் பாக்கெட்டுகளைப் பிடித்தவாறு “இவை கலப்படம் செய்யப்பட்டவை” என்று நிருபர்களை அழைத்துக் கூறினார் வேறோர் அமைச்சர்.

அந்நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவே, நீதிமன்றம் அமைச்சரின் வாய்க்குப் பூட்டுப் போட்டது. அமைச்சர் மேலமுறையீடு செய்துள்ளார். “நுணலும் தன் வாயால் கெடும்” என்பது இதுதான். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துத் தாம் சொன்னதெல்லாம் பொய்யென்றும் அவர்கள் சொல்லச் சொன்னதையே தாம் சொன்னதாக அமைச்சர் ஒருவர் இப்பொழுது கூறுவதை எப்படி நம்புவது?இதை யார் சொல்லிக் கூறுகிறார் என்ற சந்தேகம் வருவது இயல்புதானே?

கோவையில் ஆளுநர் ஆய்வு செய்ததை ‘டேக் இட் ஈசி’யாக எடுத்துக்கொள்ளச் சொல்பவரும் இதே அமைச்சர்தான். ஒருமுறை பொய் சொன்னால், தொடர்ந்து என்ன பேசினாலும் யாரும் நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாதா?

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையில் இந்த அமைச்சர் கூறப் போகும் விஷயங்கள் மிக முக்கியமானவை எனத் தெரிந்தும், ‘டேக் இட் ஈசி’ பாலிசியைக் கடைபிடிப்பது நல்லதல்ல என்பது அவருக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஈ.பி.எஸ். கலந்துகொள்ளும் போதெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ் நிழல் போலக் கூடவே செல்வது வேடிக்கையாகத் தெரியவில்லையா? கூட்டங்களில் இரண்டு பேரும் குட்டிக் கதைகள் சொல்வது மட்டும் தான் ஜெயலலிதாவைப் பின்பற்றும் ஒரே செயல்.மோடியின் காலில் விழுந்து கிடப்பவர்களுக்கு ‘சுயமரியாதை’ என்ற சொல் எப்பொழுது எதற்காகப் பிறந்தது என்னும் வரலாறு தெரியாது. தெரிந்திருந்தால், ஜெயலலிதாவின் காலிலும் பிறகு சசிகலாவின் காலிலும் விழுந்திருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் பியூஷ் கோயல் படையெடுத்து வந்தபோது பலிக்காத உதய் மின்திட்டம் எவ்வளவு எளிதாகத் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது.
அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுத்தவர் ஜெயலலிதா. ‘நீட்’ நிர்மலாவுடன் நாடகமாடி, மருத்துவராகி மாபெரும் புகழ் பெற்றிருக்க வேண்டிய ஏழை மாணவி அனிதாவைக் கொன்று, ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவ , மாணவியரின் எதிர்காலத்தை இருளாக்கிட நீட் தேர்வுக்கு வரவேற்பு நல்கியது ஈ.பி.எஸ் அரசு.
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

பால் கலப்பட விஷயமாக வாய் திறக்க முடியாத அமைச்சருக்கு ஏதாவது பேசித் தம் இருப்பைக் காட்டவேண்டிய முனைப்பு. “டிரம்ப் வந்தாலும் ஒபாமா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது – மோடி பார்த்துக்கொள்வார், இரட்டை இலைச் சின்னத்தை மோடி வாங்கித் தருவார்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். தேர்தல் ஆணைய விசாரணையில் சின்னம் இருக்கும்போது மோடி சின்னத்தைப் பெற்றுக் கொடுப்பார் என்றால் தேர்தல் ஆணையம் சுய அதிகாரம் உள்ள அமைப்பல்ல என்று தானே பொருளாகிறது. மோடியின் காலடியில் கட்சியையும் ஆட்சியையும் சமர்ப்பித்துவிட்டார் அமைச்சர்.
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையைக் கடுமையாக எதிர்த்து வந்தார் ஜெயலலிதா. மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் கெடுதலான விஷயம் என்று கருதினார். அவருடைய மறைவிற்குப் பின் எவ்விதத் தடையுமின்றித் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட்டது ஜி.எஸ்.டி.
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

உணவுத்துறை அமைச்சர் இனிமேல் நியாய விலைக் கடைகளில் உளுந்தம்பருப்பு கிடைக்காதென்றும் கனடியன் பருப்பு, மசூர் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பருப்பு மட்டும் ஒரு கிலோ வழங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் வாயைத் திறந்தாலே பொய்யே வரும் வேறொரு துறை அமைச்சர், நிருபர்களிடம் உளுந்தம் பருப்பு கிடைக்காதென்பது தவறான தகவல் என்று கூறியுள்ளார். துறை சார்ந்த அமைச்சர் கூறியதை அறியாமல் முரணாகப் பேசும் மற்றொரு துறை அமைச்சரை அடக்கி வாசிக்கக் கூறும் துணிவு முதலமைச்சருக்கு இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அமைச்சர்கள் ஆளாளுக்கு இஷ்டப்படி பேச முடிந்ததா?
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

கோவையில் தம்மிச்சையாக ஆளுநர் ஆய்வு நடத்தியது தொடர்பாகப் பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. உறுதி மிக்கவர் ஆட்சியில் இருந்தால் பன்வாரிலாலுக்கு இப்படியொரு தைரியம் வந்திருக்குமா? மாநில உரிமைகள், மாநில சுயாட்சி ஆகிய விஷயங்களில் மத்திய அரசின் சட்டத்துக்குப் புறம்பான மேலாண்மையைச் சற்றேனும் அனுமதித்திருப்பாரா? முதல்வர் பழனிச்சாமிக்கு எந்த உறுத்தலும் ஏற்படவில்லை. அவரைக் கேட்டால் ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதுதானே தலைமைச் செயலகத்தில் அவர் இருக்கும்போதே தலைமைச் செயலாளரான ராமமோகன ராவின் அலுவலகம் வருமான வரித்துறையினரால் சோதனையிடப்பட்டது என்பார்.
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

நாணயமான மத்திய அரசாக இருந்தால் முதல்வர் பழனிச்சாமியைச் சட்டப் பேரவையில் தம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோரியிருக்க வேண்டும். நெருக்கடி நிலையின்போது ஆளுநருக்கு ஆலோசகர்களாக இருந்த தவே, சுப்பிரமணியம் இருவரும் தமிழக நிர்வாகத்தை நடத்தவில்லையா? இப்போதிருக்கும் கோமாளி ஆட்சிக்குப் பதிலாக கொடுங்கோலாட்சி வெளிப்படையாக நடந்தால் பாஜக, அதிமுக இரண்டுக்குமே மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

பாஜகவில் எச்.ராஜா என்று ஒரு பெரிய மனிதர். தாமே ஆட்சிப் பீடத்தில் இருப்பது போன்று ஒரு மிதப்பு.“மாநில சுயாட்சி உளுத்துப்போய் விட்டது” என்பது அவருடைய மணிமொழி. கர்நாடக முதல்வர் தம் மாநில நலன் கருதி உரிமைகளை நிலைநாட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை ராஜா அறியவில்லையா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிரான குரல் அங்கே உரத்து முழங்கப்படுவது அவருடைய செவிகளுக்கு எட்டவில்லையா?

கேரள முதல்வர் தமிழ்நாட்டில் நடந்த மாநில சுயாட்சி மாநாட்டில் பங்குபெற்றதை ராஜா எப்படி அறியாதிருக்க முடியும்?

இங்குள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் “ஆளுநரின் கோவை ஆய்வினால் மாநில சுயாட்சி பாதிக்கப்படுவதாகக் கூறுவது தவறு என்றும் மாநில வளர்ச்சிக்காக மத்திய அரசு, ஆளுநர், மாநில அரசு என ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று கூறியுள்ளார்.மாநில நன்மைகளைக் காவு கொடுத்து மத்திய அரசுக்கு அடிபணிந்து போகும் கோழைகள் ஜெயலலிதாவின் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியற்றவர்கள். பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சராகவே தம்மைக் கருதிக்கொண்டு அதிமுகவை ஏளனமாகப் பேசி வருகிறார். அதிமுகவை, அதிமுகவினரே அழிப்பார்கள் என்கிறார். நியாயமான மனிதர் என்றால், அதிமுகவுடனான உறவில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டாமா?

‘கறுப்பு’ ராதாகிருஷ்ணனை ஓரங்கட்டச் செய்து ‘வெறுப்பு’ நிர்மலா மிகப் பெரிய பதவியில் அமர்ந்தபிறகாவது மனிதருக்கு ரோஷம் வரவேண்டாமா?

எல்லா விதிகளுக்கும் விதிவிலக்கு என ஒன்று இருப்பதைப்போல அமைச்சர் கடம்பூர் ராஜி, பொன்னார் கூற்றுக்குப் பிற அமைச்சர்கள் மவுனம் காத்தது போன்று நில்லாது பதிலடி தந்துள்ளார். பதவி சுகமே பெரிதென்றெண்ணி பொன்னார் பேச்சுக்கு மறுப்புத் தெரிவிக்க அஞ்சும் ஈபிஎஸ், ஓ.பி.எஸ்வகையறாக்கள் ஜெயலலிதா வளர்த்த கட்சி அழிந்துவிடுமென்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
– அமைச்சர்கள் சொல்கிறார்கள் இது அம்மாவின் அரசு!

பழி நாணாப் பண்பில்லாதவர்களால் தமிழக நலன்களும் உரிமைகளும் தொடர்ந்து பறிபோய்க்கொண்டிருக்கின்றன. அடுத்துவரும் இடைத்தேர்தலில் அவர்களுக்குச் சம்மட்டி அடி கொடுப்பதே, இதற்கான பரிகாரத்தின் துவக்கம்.
கட்டுரையாளர் : (தமுஎகச விருதுநகர் மாவட்டக்குழு உறுப்பினர்)

Leave A Reply

%d bloggers like this: