ஐதராபாத்,
பத்மாவதி படத்தை திரையிட்டால் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என்று திட்டமிட்டு வன்முறையை தூண்டும் வகையில் பாஜக எம்பி ராஜாசிங் லோத் தெலுங்கானா முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் இந்திப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் தெலுங்கானாவில் இந்தப் படத்தை திரையிட்டால், திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவுக்கு ஐதராபாத் கோஷமகால் தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ராஜாசிங் லோத் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், “ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசத்தை பின்பற்றி பத்மாவதி படத்தை திரையிடக்கூடாது” என கூறி உள்ளார். சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்கு அந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். பத்மாவதி படத்தை திரையிட்டால் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்துவோம் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தீபிகா படுகோனேவை உயிரோடு எரிப்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சத்ரிய மகா சபா அறிவித்தது. அவரது தலைக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் சிலர் அறிவித்துள்ளனர். அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா ஊடக தொடர்பாளர் சூரஜ் பால் அமு இந்த தொகையை உயர்த்தினார். தீபிகா படுகோனே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றார். இதையடுத்து தீபிகா படுகோனே பங்கேற்கும் விழாக்கள் மற்றும் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: