‘‘கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’’ எனும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் எத்தனை ஆழமானது என்பதை பட்டவர்களே -கடன்பட்டவர்களே அறிவார்கள். அப்படி கடன் பெற்றவர்களில் கந்துவட்டிக் கொடுமையால் தற்போதைய பலி திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார். அவர் தனது தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் அன்புச் செழியன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை. ஆனால் அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அவரை விரைந்து கைது செய்து தமிழ்நாடு கந்துவட்டி ஒழிப்புச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின்இயல்பான கோரிக்கையாக அமைந்துள்ளது.அன்புச்செழியனின் கடன்வசூல் முறை திரைப்படத்தில் வரும் காட்சிகளை விட மோசமாகவும் கொடுமையாகவும் இருந்தது என்பதால் அந்தச் சித்ரவதைகளையும் அவமானங்களையும் தாங்க முடியாமல் நடந்ததுதான் ஜி.வெங்கடேஸ்வரன் எனும் ஜிவி எனும் திரைப்படத் தயாரிப்பாளரின் தற்கொலை.

அப்போது பரபரப்பாக பேசப்பட்டதுடன் பின்னர் கந்துவட்டிக் கொடுமைக்கு எதிரானநடவடிக்கைகள் எடுக்கப்படுதல் தொடராமல்போனதால்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்துவட்டிக்காரர்களின் கொடூரங்கள்அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன.கந்துவட்டிக் கொடூரத்தை எதிர்த்ததால் பள்ளிப்பாளையம் வேலுச்சாமி வெட்டிச் சாய்க்கப்பட்ட வழக்கில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காதது துயரமே. கடந்த மாதம் நெல்லை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகம் முன்பே தீக்குளித்து குடும்பமே தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே பதைபதைக்கச் செய்தது. மனச்சாட்சியுள்ள மக்களின் உள்ளத்தை உறையச் செய்தது. ஆயினும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமைக்கு எதிரான புகார்களும் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயல்வதும் நடந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு மூதாட்டியிடம் வீட்டை எழுதி வாங்கியதால் மகன் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார்.தேனி மாவட்டத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலைக்குமுயன்றார்கள். இன்னும் தெரியவராதநிகழ்வுகள் எத்தனையோ?அன்புச்செழியனின் கந்துவட்டிச் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களில் பிரபல நடிகைகள்உண்டு என்பதும் திரைத்துறை மட்டுமல்ல, பொதுமக்களும் அறிந்த விஷயம் தான்.

ஆனாலும் கூட அவரது நடவடிக்கைகள் தொடரக் காரணம் காவல்துறை, அரசியல் செல்வாக்குதான். இதைத்தான் தயாரிப்பாளர் அசோக்குமார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். தான் கொலைகாரன் ஆகத் துணிவில்லாததால் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறியிருப்பது எதைக்காட்டுகிறது? எனவே காவல்துறை விரைந்து நியாயமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் திரைப்படத்துறையினர் கூறுவதுபோல நீதி விசாரணை நடத்துவது அவசியம். நிதி உதவிக்கான ஏற்பாடு செய்யப்படுவதும் திரைப்படத்துறையின் தேவையாகும். இல்லையெனில் கந்துவட்டிக்கு காவு கொடுக்கும் நிலை மாறாது.

Leave A Reply