கொல்கத்தா, நவ.20-

மோடி அரசாங்கம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தற்போது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் தாக்கத்துவங்கிவிட்டது.  அதன் பிரதிபலிப்புதான் இன்னமும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரைத் துவங்காது தட்டிக்கழித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

நவம்பர் புரட்சி தின விழாக் கொண்டாட்டம் கொல்கத்தாவில் வெள்ளியன்று மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றுகையில் சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

ஆட்சியாளர்கள் அமித் ஷாவின் மகன் மற்றும் அஜித் டோவலின் மகன் ஆகியோரின் வர்த்தகப்பித்தலாட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல பயந்தே நாடாளுமன்றத்தையே கூட்டுவதற்கு அஞ்சுகிறார்கள். குஜராத்தில் சட்டமன்றத்தை ஆண்டுக்கு 30 நாட்கள் கூட கூட்டுவதில்லை. இப்போது அதே பாணியை நாடாளுமன்றத்திற்கும் மோடி கொண்டு வந்திருக்கிறார். அரசாங்கம் தான் செயல்கள் குறித்து பதில் சொல்லக்கூடிய ஒரேயிடம் நாடாளுமன்றம்தான். இப்போது அதனையே முடக்குவது என்பது, அதிகரித்துவரும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலின் பிரதிபலிப்புதான்.

சோவியத் ரஷ்யாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, புரட்சிகரப் போராட்டத்தை முன்னெடுத்துத்தான் புரட்சியை நடத்தினார்கள். இத்தகைய புரட்சிகர போராட்ட ஒற்றுமையில்லாமல் அங்கே புரட்சி சாத்தியமாகியிருக்காது. அதேபோல் நாமும் இங்கே நாட்டிலுள்ள துல்லியமான நிலைமைகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப நம் அகநிலை சக்திகளை (subjective forces) தயாரித்திட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

நாட்டில் பாசிஸ்ட் சக்திகள் வளர்ந்துகொண்டிருக்கின்றன.  மதச்சிறுபான்மையினர், தலித்துகள் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். எதார்த்தத்தில், அவற்றை தனியார் ராணுவங்கள் செய்துவருகின்றன. பத்மாவதி திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கூறுவதன்மூலம் கலாச்சார உலகமும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது. இவற்றையெல்லாம் இடதுசாரிகளும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் துணிவுடன் எதிர்த்துவருவதால், அவர்கள் நம்மீதும் குறிவைத்துத்தாக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவேதான் இப்போது கேரளாவிலும், திரிபுராவிலும் இவர்கள் தாக்குதல்களைத் துவக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.