பத்து நாட்கள் ஆகின்றன.யுகப்புரட்சியின் நூற்றாண்டு நிறைவை உலகம் எப்படி கொண்டாடியது என்பதைப் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.முதலாளித்துவ ஊடகங்களுக்கு இவையெல்லாம் ஒரு செய்தியே அல்ல. நவம்பர் 7 அன்று மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான பேரணி கூட சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களுக்கு அதிகபட்சம் ஒரு புகைப்படத்துடன் கூடிய 15×10 சென்டிமீட்டர் அளவிலான செய்தி மட்டுமே.

ஆனால் உலகின் மிகப்பெருவாரியான மக்கள் சமூகமாம் உழைக்கும் வர்க்கம் கடந்த ஓராண்டு முழுவதும் கொண்டாடிய மகத்தான சோவியத் சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு நிறைவு நாள் – உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இடங்களில் கொடியேற்றங்கள், பேரணிகள், கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், மாநாடுகள்… இன்னும் எத்தனையோ வடிவங்களில் உச்சக்கட்ட கொண்டாட்டத்தை எட்டியது.

லத்தீன் அமெரிக்க நாடுகளான பொலிவியா, வெனிசுலா துவங்கி பசிபிக் பெருங்கடலின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் வடகொரியா வரையிலும் அநேகமாக ஒட்டுமொத்த உலக உருண்டையும் ஒரே முழக்கத்துடன் – புரட்சி ஓங்குக – சோசலிசம் வெல்லும் – என்ற உத்வேகம் அளிக்கும் நம்பிக்கையுடன் கொண்டாடிய விழா ஒன்று உண்டு என்று சொன்னால் அது நவம்பர் 7 சோவியத் புரட்சியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டமே. மகத்தான புரட்சியாளர்கள் பிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் வாழ்ந்த மண்ணாம் கியூபாவில் கடந்த ஆண்டு முழுவதும் பிரம்மாண்டமான லெனின் படங்கள் ஜொலித்தன. நிறைவு விழாவில் ஹவானாவில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி. மின்னொளியில் லெனின் பார்த்துக் கொண்டிருக்கிறார். விதவிதமான நிகழ்வுகளில் செங்கொடி ஜொலிக்கிறது. ராணுவ மிடுக்குடன் – அதே நேரத்தில் அனைத்துவிதமான கலை அம்சங்களுடன் கியூப சோசலிச அரசாங்கம் இந்த விழாவை நடத்தியது.

வெனிசுலா தலைநகர் காரகஸில் லட்சக்கணக்கானோர் கூடியிருக்க இடதுசாரி அரசாங்கத்தின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ புரட்சிதின உரையாற்றுகிறார். பின்னணியில் டிஜிட்டல் ஒளியில் லெனின் சிரிக்கிறார். பொலிவியாவிலும் இதே காட்சிகள். பிரேசில், சிலி, பராகுவே, பெரு, உருகுவே, நிகரகுவா உள்பட லத்தீன் அமெரிக்கா முழுவதும் பேரெழுச்சி. லெனினும் பிடலும் சேயும் ஜோஸ் மார்ட்டியும் சைமன் பொலிவாரும் சிரித்தார்கள்.

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் லெனினும் ஸ்டாலினும் கைகளில் ஏந்தப்பட்டு பேரணிகளில் சிரித்தார்கள். கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, அயர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி, போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி… இன்னும் பல்வேறு நாடுகளது கம்யூனிச இயக்கங்கள் புரட்சியின் நூற்றாண்டு நிறைவை பேரெழுச்சியுடன் கொண்டாடின.மக்கள் சீனத்தின் மாநகரங்கள் எங்கும் – கிராமப்புறங்கள் எங்கும் புரட்சிக்கீதம் இசைக்கப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கில் தேசிய அருங்காட்சியகத்தில் சீன அருங்காட்சியகமும் ரஷ்ய அரசு வரலாற்று அருங்காட்சியகமும் இணைந்து நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு நிறைவை குறிக்கும் விதத்தில் மிகப்பிரம்மாண்டமான கூட்டுக் கண்காட்சியை ஒன்றை அமைத்திருந்தன. லட்சக்கணக்கான மக்கள் அந்த வரலாற்று நிகழ்வுகளை பார்வையிடக் குவிந்தனர்.

சீனாவின் தொலைதூர பிரதேசத்தில் அமைந்திருக்கிறது ஹெனான் மாகாணம். அங்கு கடைக்கோடியில் அமைந்துள்ளது நாஞ்சியே கிராமம். பிரம்மாண்டமான லெனின் படம் அமைக்கப்பட்டு செங்கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, கிராம மக்கள் லெனினோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
வியட்நாம் தலைநகர் ஹனோயில் லெனினும் ஹோ சி மின்னும் பிரம்மாண்டமாக கையசைத்தார்கள். நவம்பர் 7 நாள் முழுவதும் வியட்நாம் புரட்சிகர நிகழ்ச்சிகளால் நிரம்பியிருந்தது.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் பல்வேறு இடங்களில் மார்க்சியத்தின் மகத்துவம் குறித்தும் லெனினியத்தின் கோட்பாடுகள் குறித்தும் சொற்பொழிவுகளை நடத்தின.
வடகொரியா முழுவதும் அந்நாட்டின் கொரிய தொழிலாளர் கட்சியும் அதன் தலைமையிலான கொரிய மக்கள் ஜனநாயக குடியரசு அரசாங்கமும் சோவியத் புரட்சியை பேரெழுச்சியோடு கொண்டாடின. வழக்கமான பிரம்மாண்ட அணிவகுப்பு அங்கு நடைபெற்றது.புரட்சியின் மையத்தில் என்ன நடந்தது? ரஷ்யாவில் எப்படி கொண்டாடப்பட்டது?
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அந்நாட்டின் அனைத்து இடதுசாரி இயக்கங்களையும் இணைத்து, ரஷ்ய அரசாங்கத்தில் தனக்குள்ள செல்வாக்கையும் பொருத்தமான முறையில் இணைத்து உலக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வியக்கும் விதத்தில் புரட்சியின் நூற்றாண்டை பிரம்மாண்டமாகக் கொண்டாடியது. அதன் முத்தாய்ப்பாக சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 19வது மாநாட்டையும் ஒருவார காலம் ரஷ்யாவில் நடத்தியது.

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் சர்வதேச தொழிலாளர் கட்சிகளின் மாநாடு என்பது, 1990களில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கங்களின் முன்முயற்சியால் இன்னும் குறிப்பாக கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின்பேரில் முதன் முதலாக ஏதென்ஸ் நகரத்தில் கூடியது. ஆனால் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உந்து சக்தியாக திகழ்ந்த ஒரு கட்சி இருக்கிறது என்று சொன்னால் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) என்று இன்றும் உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகின்றன.

சோவியத் வீழ்ந்துவிட்டது; சோசலிசமும் வீழ்ந்துவிட்டது; இனி முதலாளித்துவத்தை விட்டால் இந்த உலக மக்களுக்கு வேறு கதி இல்லை என்று 1990களில் முதலாளித்துவ சக்திகள் கெக்கலி கொட்டி சிரித்தபோது, சோவியத் வீழ்ந்திருக்கலாம். ஆனால் சோசலிசம் ஒரு போதும் வீழாது என்று முதல் முழக்கமிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. கட்சியின் அன்றைய மகத்தான தலைவர்கள் இஎம்எஸ்., ஜோதிபாசு, ஹர்கிசன் சிங் சுர்ஜித் போன்றவர்களின் உறுதிமிக்க மார்க்சிய – லெனினிய சிந்தனைகள் உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களை நம்பிக்கையுறச் செய்தன.சோவியத் வீழ்ந்தபோது இனி சோசலிசத்திற்கு வழியில்லை என்று நம்பிக்கை இழந்து உலகின் பல பகுதிகளில் இடதுசாரி அமைப்புகள் தங்கள் கொடிகளையும் கொள்கைகளையும் ஏன் பெயரையும் கூட கைவிட்டு சமூக ஜனநாயக கட்சிகளாக மாறிக்கொண்ட போதிலும் கூட ரஷ்யா, கிரீஸ் உட்பட பல்வேறு நாடுகளது கம்யூனிஸ்ட் இயக்கங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த உறுதிப்பாட்டை – சோசலிசமே எதிர்காலம் என்ற அந்த முழக்கத்தை நம்பிக்கையோடு பார்த்தன.

இந்தப் பின்னணியில் 1993ல் கொல்கத்தாவில் காரல் மார்க்ஸின் 175ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு சர்வதேச கருத்தரங்கினை நடத்தியது. உலக கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிலாளர் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. அன்றைய சூழலில் – சோவியத் வீழ்ந்த அடுத்த இரண்டு ஆண்டு காலத்திலேயே – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பை ஏற்று சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளது தலைவர்கள் கொல்கத்தாவில் கூடினார்கள். சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்று உறுதியேற்றார்கள். அந்த உறுதியின் உத்வேகத்தால்தான் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளது மாநாட்டை முதன்முதலாக நடத்தியது.

அதன் 19ஆவது அமர்வைத்தான் புரட்சியின் நூற்றாண்டை முன்னிட்டு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது.லெனின்கிராடு என்று புகழோடு அழைக்கப்பட்ட செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நவம்பர் 1 அன்று துவங்கி மாஸ்கோ நகரில் நவம்பர் 7 அன்று இந்த மாநாடு நிறைவுபெற்றது. முதன்முதலாக 7 நாட்கள் நடைபெற்ற மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.புரட்சியின்போது லெனின் தலைமையில் போல்ஷ்விக்குகள் கூடிய அதே அரங்கில் நவம்பர் 1 அன்று கூடிய இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உட்பட 60 கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், 12 கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணைப் பொதுச் செயலாளர்கள் பங்கேற்றார்கள். இவர்கள் உட்பட உலகம் முழுவதும் இருந்து மொத்தம் 103 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் பிரதிநிதிகள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மாகாணச் செயலாளர்கள் உட்பட 188 பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கென்னடி ஜூகானவ் தனது எழுச்சிமிகு உரையுடன் துவக்கி வைத்தார்.

மாநாட்டின் நிறைவாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, கொரிய தொழிலாளர் கட்சி மற்றும் ஹங்கேரி தொழிலாளர் கட்சி ஆகிய கட்சிகளையும், சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழுவில் இணைத்துக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகெங்கிலும் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் ஒன்றிணைந்து பரஸ்பரம் தகவல் பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றம், உலகளாவிய முதலாளித்துவ – பாசிசத் தாக்குதல்களுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது மார்க்சின் 200ஆம் ஆண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது; மூலதனம் நூலின் 150ஆம் ஆண்டு நடந்து கொண்டிருக்கிறது; அதேபோல மாமேதை லெனினின் அரசும் புரட்சியின் நூலின் நூற்றாண்டு விழா 2018ல் வருகிறது; மார்க்ஸ் – ஏங்கல்ஸின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டதன் 150ஆம் ஆண்டு வருகிறது; அதேபோல ஸ்டாலின்கிராடில் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தின் 75ஆம் ஆண்டு வருகிறது – இந்த நிகழ்வுகள் அனைத்தும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள் அனைவருக்கும் பேரெழுச்சியும் உத்வேகமும் ஊட்டக்கூடிய வரலாறுகள். இந்த வரலாறுகளை உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்களிடையே எடுத்துச் செல்வோம் என 19ஆவது சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் மாநாடு தீர்மானித்தது. 7நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவுப் பகுதி – சோவியத் புரட்சி நூற்றாண்டு நிறைவு விழாவாக அமைந்தது. மாநாட்டுப் பிரதிநிதிகள் லெனின்கிராடிலிருந்து மாஸ்கோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நூற்றாண்டு நிறைவையொட்டி நவம்பர் 6 அன்று சர்வதேச இடதுசாரிகள் மன்றத்தின் சார்பில் “அக்டோபர் 1917: சோசலிசத்தை நோக்கிய மாபெரும் பயணத்தின் துவக்கம்” என்ற பொருளில் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளது தலைவர்கள் பேசினார்கள். இதில் குறிப்பிடத்தக்க பிரதிநிதிகளாக பங்கேற்று உரையாற்றியவர்கள் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்தும்.

அடுத்த நாள் நவம்பர் 7. ஒட்டுமொத்த ரஷ்யாவும் உணர்ச்சிப் பிழம்பாய் மாறியது. தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரம்ளின் மாளிகையில் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ புரட்சி நூற்றாண்டு நிறைவு ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. ரஷ்ய ராணுவ வீரர்களே கலைஞர்களாக மாறி – ரஷ்யாவின் மாபெரும் போர்களை நினைவுகூரும் விதத்தில் காட்சிகளை அரங்கேற்றினார்கள். பாசிசத்திற்கு விதைபோட்ட நெப்போலியன் போனபார்ட்டை எதிர்த்தும் பாசிசத்தை அரங்கேற்றிய ஹிட்லரின் படைகளை எதிர்த்தும் போரிட்டு இந்த உலகைக் காத்தது ரஷ்யாவும் பின்னாட்களில் சோசலிச சோவியத் ரஷ்யாவும்தான் என்பதை அந்த வீரர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து நூற்றாண்டு நிறைவுப் பேரணி பிரம்மாண்டமான காட்சியாக விரிந்தது.இதைப்பற்றி, மாநாட்டிலும் இந்த நிகழ்வுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியுடன் சக பிரதிநிதியாக பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறை தலைவரும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.பேபி இவ்வாறு எழுதுகிறார்:

“மாநாட்டிற்கு இடையே ஒரு நாள் லெனின் நினைவிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்கள். நூறாண்டுகளுக்கு முன்பு இந்த உலகையே புரட்டிப்போட்ட அந்த மாமனிதர் அவரது நினைவிடத்தில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தார். நவம்பர் 7. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்திலும் ரஷ்யா முழுவதிலும், உலகம் முழுவதிலும் அந்த மாமனிதன் கோடானுகோடி மக்களின் உள்ளங்களிலிருந்து எழுந்த முழக்கங்களிலும் பிரம்மாண்டமான கம்யூனிஸ்ட் கட்சிகளது கொடிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கிறார்”.

Leave a Reply

You must be logged in to post a comment.