மூடீஸ் (Moody’s) என்ற அமெரிக்க தரச் சான்றிதழ் நிறுவனம் (Rating Agency) இந்தியப் பொருளாதாரம் குறித்தும், இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் வழங்கியிருக்கும் நற்சான்று, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைப் பொய்யாக்கி இருக்கிறது; எனவே, அவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார்.செல்லாப்பண அறிவிப்பு நடவடிக்கைகள், ஜி.எஸ்.டி என அனைத்துக்கும், இந்தத் தரச்சான்று ஒன்றே பதில் என அவர் புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
அவருக்கு நமது பணிவான நினைவூட்டல் :

2008 அமெரிக்க நிதி நெருக்கடி வெடித்துச் சிதறிய நாளுக்கு முந்தையநாள் வரை, அதாவது லே மான் பிரதர்ஸ் வங்கி,ஏஐஜி (AIG) இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற பல நிறுவனங்கள் திவால் நிலையின் வாசற்படியை மிதிக்கும் வரை, நிலைமை என்ன?

இந்த மூடீஸ் (Moody’s), ஸ்டாண்டர்டு அண்ட் புவர் (Standard and Poor), ஃபிட்ச் (Fitch) ஆகிய தரச்சான்று நிறுவனங்கள் அந்த நிறுவனங்களுக்கு வழங்கிய தரச்சான்று என்ன தெரியுமா? டிரிப்பிள் ஏ (AAA) தரம். அதாவது மிக மிக உயர் தரம்.ஆனால், மறு நாள் லே மான் வங்கி திவாலாகிப் போனது. பல டிரிப்பிள் ஏ கம்பெனிகள் கவிழ்ந்து போயின. ஏ.ஐ.ஜி இன்சூரன்ஸ் உலகிலேயே முதன்மையானது, அது திவலாகி விடக் கூடாது (Too big to fall) என்று காரணம் சொல்லி, மக்களின் வரிப்பணத்தில் அமெரிக்க அரசு அதைக் காப்பாற்றியது.

இந்தத் தரச்சான்று வழங்கலின் பின்னணியில், தணிக்கையாளர்கள்,(Auditors) ஒழுங்காற்று ஆணையங்கள் (Regulators), தரச்சான்று நிறுவனங்கள் (Rating Agencies) இருந்தன. தரச்சான்று நிறுவனங்கள் அமெரிக்க மக்கள் மற்றும் பொருளாதார அறிஞர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகின. தரச்சான்று நிறுவனங்கள் ஏதேதோ சொல்லி சமாளித்தன. ஆனால், நிதிச் சந்தையில் விற்கப்பட்ட ஆவணங்கள் குறித்து இந்த தரச்சான்று நிறுவனங்கள் தங்களை காலத்தில் எச்சரிக்காததால் பெருத்த நஷ்டமடைந்த மக்கள் அதனை ஏற்கவில்லை. அதையடுத்து அமெரிக்காவிலும், உலகமெங்கிலும் எழுந்த கோஷங்கள் என்ன தெரியுமா?“தணிக்கையாளர்களைத் தணிக்கை செய் ! ( Audit the Auditors )”

“ஒழுங்காற்றுனர்களை ஒழுங்காற்று ! ( Regulate the Regulators )”

“தரச்சான்று நிறுவனங்களை தரப்படுத்து ! (Rate the Rating Agencies)”

அருண் ஜெட்லி அவர்களே ! இந்தக் கதை எங்களுக்கே தெரிந்திருக்கும் போது, உங்களுக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்?
இ.எம்.ஜோசப்

Leave a Reply

You must be logged in to post a comment.