தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமித்ததன் வாயிலாக கேரள அரசு சமூக நீதிக்கான முன்னெடுப்புகளில் ஒன்றை மேற்கொண்டிருக்கிறது. பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசின் நடவடிக்கை இன்னொன்றையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு ஜனநாயக அமைப்பில் சமத்துவத்தை நிலைநிறுத்த எதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லியிருக்கிறது. வெற்று மரபுகள் அல்ல; மக்களுக்கு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது என்பதைச் செயல்பாட்டின் மூலம் நிறுவியிருக்கிறது.அனைத்துச் சாதியினரும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை 1970ஆம் ஆண்டு தமிழகமே முதலில் உருவாக்கியது. ஆனால் சட்டம் போடப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை. பழைய மரபுகளின் பெயராலும் வழக்கங்களின் பெயராலும் இந்தச் சட்டம் காகித உத்தரவாதமாகவே இருந்துவரும் நிலையில் பினராயி அரசின் செயல் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரி நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இடதுசாரி அரசு அல்லாத ஒன்றால் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்திராது என்பது உண்மை. ஆனால் அதற்குப்பின்னால் முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடந்த போராட்டங்களே மாற்றத்துக்கு வழியமைத்திருக்கின்றன. ஆலயங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைவது தெய்வ நீதிக்கு அடுக்காது என்று வைதீக நம்பிக்கையாளர்கள் வலியுறுத்தினர். அது சமூக நீதிக்குப் புறம்பானது என்று சீர்திருத்தவாதிகள் போராடினர். வைதீக மனப்பான்மைக்கு எதிராகவே கேரளத்தின் ஆன்மீக குருவான நாராயணகுரு ஈழவ சிவனை ஸ்தாபித்தார். சிறு தெய்வங்களை பெருந்தெய்வங்களின் தகுதிக்கு உயர்த்தினார்.‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயத்தில் நுழைய உரிமை உண்டு’ என்று வாதிட்ட காந்தியிடம் ‘அது ஆச்சார விரோதம்’ என்று காஞ்சி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி நேரில் எடுத்துச் சொன்னார். புலைய சமுதாயத்தின் தலைவரான அய்யங்காளி உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து போராடினார். இந்தப் பின்னணிகள் சமூகத்தில் ஏற்படுத்திய சிந்தனை மாற்றமே பினராயி அரசின் அர்ச்சக நியமனத்துக்கு வழிகோலியிருக்கிறது; பொதுச் சமூகத்தில் ஒரு மாற்றத்துக்கு நெடிய காலம் தேவைப்பட்டிருந்தது என்பது வரலாற்றின் சோகம்.

தலித்துகள் ஆலயங்களில் நுழையவே அனுமதிக்கப்படாத காலமும் இருந்துள்ளது. 1936இல் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரான சித்திரைத் திருநாள் பாலராமவர்மாவின் ஆலயப் பிரவேச விளம்பரம் தாழ்த்தப்பட்டவர்கள் ஆலயத்துக்குள் நுழைய அனுமதித்தது. இது வழிபாட்டில் வேற்றுமையைக் களைய உதவியது. எனினும் கடவுளுக்குப் பணியாற்றும் வாய்ப்பை அளிக்கவில்லை. பிறப்பின் பெயரால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்த ‘தீண்டாமை’ அதற்குத் தடையாக இருந்தது. கேரள அரசின் புதிய நியமனம் அந்தத் தடையை ஒழித்திருக்கிறது.கேரள அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் இந்த மாற்றம் அம்மாநிலத்தைப் பொறுத்தவரையிலும் கூட ஒரு தொடக்கம் மட்டுமே. கேரள அறநிலையத்துறை மூன்று பிரிவுககளைக் கொண்டது. மலபார், கொச்சி, திருவிதாங்கூர் தேவசங்களில் தேவஸ்தானங்களில் திருவிதாங்கூர் தேவச வாரியமே புதிய நியமனத்தைச் செய்திருக்கிறது. அர்ச்சகர் பணிக்காக நியமிக்கப்பட்ட 62 பேரில் 36 பேர் பிராமண வகுப்பைச் சேராதவர்கள். இதில் 21 பேர் பிற்படுத்தப்பட்ட ஈழவ சமுதாயத்தையும் ஆறு பேர் தலித் பிரிவையும் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்போதே சமூக நீதிக்கான அடித்தளம் வலுப்பெறும்.
பினராயி அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் அர்ச்சக நியமனம் பின்வரும் செய்திகளை நமக்கு உணர்த்துகின்றன.

* இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் சாசனம் அனுமதித்துள்ள உரிமைகள் பொதுவானவை; உரிமைகள் பாகுபாடற்றவை என்பதை வலுப்படுத்தியிருந்தது.

* ஒரு குடிமகனின் தகுதி நிர்ணயிக்கப்படுவது பிறப்பினால் அல்ல; அவனது செயல்களால் என்பதை எடுத்துக்காட்டுகிறது. பிறப்பின் மூலமல்ல சமூக வாய்ப்புகளின் மூலமே தகுதியும் தாமும் உருவாகின்றன என்பதைச் சொல்கிறது.கேரளத்தின் முதல் ‘தலித் தந்திரியாக’ நியமனம் பெற்றிருப்பவர் தலித் சமூகப் பிரிவைச் சேர்ந்த யது கிருஷ்ணா. அர்ச்சகப் பணிக்கான கல்வியை முறையாகப் பயின்றவர். அந்தக் கல்வி சார்ந்து தேவசம் வாரியம் நடத்திய தேர்வில் வெற்றிபெற்று நியமிக்கப்பட்டவர், பிறப்பல்ல; சமூகச்சூழலே ஒருவனை உருவாக்கும் என்பதற்கு யது கிருஷ்ணா எடுத்துக்காட்டு.

* இந்த நியமனத்தின் மூலம் சமூக மனத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். பொருளாதார அடிப்படையிலும் சமூகப் படிநிலையிலும் தாழ்த்தப்பட்ட நிலையைச் சேர்ந்தவர்கள், அவற்றில் மேம்பாடு அடையும்போது பிராமணிய வழக்கங்களுக்கும் சடங்குகளுக்கும் ஆட்படுகின்றனர். அந்தச் சடங்குகளும் வழக்கங்களுமே உயர்ந்தவை என்ற கருத்துக்கு உள்ளாகின்றனர். இந்தக் கருத்தாக்கத்தை ‘தலித் அர்ச்சக நியமனம்’ கேள்விக்குட்படுத்துகிறது.

மனிதர்களில் வேற்றுமை இல்லை என்பதை எடுத்துக்காட்ட மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல்பாடு கடவுள்களிலும் வேற்றுமை இல்லை என்பதையும் காட்டுகிறது. தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமாக ஒதுக்கப்பட்ட சிறு தெய்வங்களுக்கு மட்டுமே அவர்கள் கைங்கர்யம் செய்தால் போதும் என்ற ஆதிக்க மனநிலையை இந்நியமனம் காலாவதியாக்கியிருக்கிறது. வித்தையறிந்தவனின் கைங்கரியத்தைப் பெருந் தெய்வங்களும் உவந்து ஏற்கும் என்ற பாடத்தைக் கற்பிக்கிறது.வேறு எதையும் விட முக்கியமானது கேரள அரசு இந்த நியமனத்தை நடத்தியிருக்கும் காலம். மதத்தின் பெயரால் வெறுப்பும் கொலையும் வன்முறையும் நிகழ்த்தப்படும் காலத்தில் இந்த நியமனம் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுவே செயல்பாட்டை வரலாற்று முக்கியத்துவம் கொண்டதாக்குகிறது.

நன்றி: காலச்சுவடு தலையங்கம் (நவம்பர் 2017)

Leave A Reply

%d bloggers like this: