திருப்பூர், நவ.16 –
திருப்பூர் உள்விளையாட்டு அரங்கில் விளையாடும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விளையாட்டுக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் விளையாட்டுப் பயிற்சியாளர்களும் தனியாக கூடுதல் கட்டணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், 17 பல்நோக்கு விளையாட்டு கூடங்கள், 25 மினி விளையாட்டு அரங்கங்கள் உள்ளன. இங்கு, சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க பல வசதிகள் செய்து தரப்படுவதாக விளையாட்டு ஆணையம் கூறுகிறது. எனினும் இந்த விளையாட்டுக்கூடங்களில் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதி, பராமரிப்பு இன்றி, பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் இல்லாமலும் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக விளையாட்டு ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் சிக்கண்ணா அரசுக் கல்லூரி மைதானத்தில் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில், 2,827.40 சதுர மீட்டர் பரப்பில் பல்நோக்கு உள்விளையாட்டு கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று முடிந்து அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.தற்போது இங்கு இறகுப்பந்து விளையாட்டு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சிறுவர்கள் 55 பேர் விளையாட வருகின்றனர். அத்துடன் பெரியவர்களும் இங்கு விளையாட வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இருக்கும் விளையாட்டு அரங்குகளுக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தி நவம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதன்படி சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.300ஆக இருந்தது ரூ.600 ஆக நூறு சதவிகிதம் உயர்த்தியுள்ளனர். அதேபோல் பெரியவர்களுக்கு ரூ.400 ஆக இருந்த கட்டணத்தை ரூ.1500 ஆக ஏறத்தாழ 400 சதவிகிதம் அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளனர். இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன் விளையாட்டுப் பயிற்சியளிப்போரும் தங்களுக்கு ரூ.1200 பயிற்சிக் கட்டணம் வழங்க வேண்டும் எனக் கேட்பதாக அங்கு விளையாடச் செல்வோர் தெரிவித்தனர்.

இது குறித்து விளையாட்டு அலுவலர் பியூலாவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கட்டணத்தை மறுபரிசீலனை செய்து மாநில அரசு கட்டண உயர்வு செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்துள்ளது குறித்தும் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதுவரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதேசமயம் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் கட்டணம் வசூலிப்பதில்லை என்றார். வெளி பயிற்சியாளர்கள் கட்டணம் வசூலித்தால் அது தவறு. விளையாட்டு ஆணைய அரங்கில் வெளி பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முறையாக உரிமம் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனுமதி பெறாத வெளி பயிற்சியாளர்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

தமிழகத்தில் திருப்பூர் மட்டுமின்றி நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விளையாட்டு அரங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இது பற்றி விளையாட்டு ஆர்வலர்கள் கூறும்போது, ஜெயலலிதாவின் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி அரசு, அவர் விளையாட்டுகளுக்கு ஆர்வம் செலுத்தி தேவையான வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து, உதவிகளும் செய்தார். ஆனால் இப்போதைய அரசு சாமானிய ஏழை, எளிய வீட்டுப் பிள்ளைகள் விளையாட்டு அரங்கத்துக்கு வருவதற்கும், அங்கு பயிற்சி பெறுவதற்கும் முடியாதபடி கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. எனவே கட்டண உயர்வை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.