திருப்பூர், நவ. 16
பின்னலாடை ஏற்றுமதிக்கு வழங்கப்படும் டிராபேக் எனப்படும் ஊக்கத்தொகையைக் குறைத்து, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாக வசூலிக்கும் நிலையில் தொழில் நடத்த முடியாமல் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையைத் தடுக்க மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் (டீமா) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் வியாழனன்று அனுப்பியுள்ள கடித விபரம் வருமாறு:- திருப்பூரில் தயாராகும் ஆயத்த ஆடைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது. மேலும், இத்துறையில் புதிய வடிவமைப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்வதில் திருப்பூர் முன்னணியில் உள்ளது. தொழிலின் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி குறிப்பிட்ட வர்த்தக இலக்கை எட்ட முடியாமல் திணறி வருகிறது. பிற நாடுகளுக்கு இணையாக நமது ஏற்றுமதி வர்த்தகமும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியஅரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் துணிகளை வெட்டி, பிற வேலைகளை ஜாப் ஒர்க் அடிப்படையில் வெளியில் கொடுத்து செய்து வாங்கும் நிறுவனங்களே அதிகம் உள்ளன. அனைவருக்கும் ஒட்டுமொத்த உதவியாக இருப்பது அரசு வழங்கி வரும் டிராபேக் எனும் ஊக்கத்தொகையே ஆகும். எனவே டிராபேக் சதவீதத்தினை அரசு குறைத்திருப்பதை மறுபரிசீலனை செய்து, முன்னிருந்த 7.5 சதவீதத்தை விட அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் வங்கிகளின் பங்கு முக்கியமானது. பின்னலாடை உற்பத்திக்கு வங்கிகள் கடனுதவி வழங்கிவருகின்றன என்றாலும், அதற்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. ஏற்றுமதிக்கான டிராபேக் விகிதம் குறைக்கப்பட்டு, வங்கிக் கடனுக்கான வட்டி அதிகமாக இருப்பதால் பின்னலாடை உற்பத்தியினைக் கட்டாயமாக மேற்கொள்ள முடியாது. இந்த நிலையின் பாதிப்பு காரணமாக திருப்பூரில் பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இதனால் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை சார்ந்துள்ள உபதொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால் தொழில் அழிந்து விடும். எனவே தொழில்துறையினருக்கு வழங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்யவும், குறைந்த வட்டியில் வங்கிகள் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.