===க. கனகராஜ்===
விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் நவம்பர் 11 அன்று தோழர் வி.பி. சிந்தன் அவர்களின் நூற்றாண்டு விழா விருதுநகரில் அச்சங்கத்தின் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அந்த சங்கம் எனக்கும் அளித்திருந்தது. விழாவில் தோழர் வி.பி.சி. குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன் அவர்களின் உரையும், கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ஆனால், அந்த விழாவில் பங்கு கொள்ள மேடைக்கு முன்பு கூடியிருந்தவர்களின் கூட்டம் சற்று வித்தியாசமானது.தொழிற்சங்கத்தலைவர்களில் ஒருவரான தோழர் வி.பிச்சையுடன் மதுரையிலிருந்து விருதுநகர் சென்றடைந்த போது விழா ஆரம்பித்திருக்கவில்லை. விரிக்கப்பட்டிருந்த சேர்களில் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். ஆங்காங்கே சில ஆண்கள். ஒரு திருவிழா, திருமணம், குடும்ப நிகழ்ச்சி போல எல்லா வயதினரும், இருபாலரும் கலந்து கொண்ட கூட்டமது.

குழந்தைகளும், பெண்களுமே அதிகமாக இருந்தார்கள். தொழிற்சங்க கூட்டங்களில் காணப்படும் வழக்கமான ‘அமைதியும், நேர்த்தியும்’ அங்கு இல்லை. ஆனால், ஒரு திருவிழாவில் இருப்பதை போன்ற குழந்தைகளின் விளையாட்டும், பெண்களின் பேச்சுகளும் என மேடையிலிருந்து பார்ப்பதற்கு நிச்சயமாக அது ஒரு தொழிற்சங்க கூட்டம் போன்ற தோற்றமில்லை.

விழாவிற்கு நிதி கொடுத்தவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். பலர் குடும்பமாக மேடைக்கு வந்தனர்.ஒரு சில பெயர்கள் அழைக்கப்பட்ட போது குடும்பத்தலைவி மட்டும் மேடைக்கு வந்து சங்கம் அளித்த மரியாதையை பெற்றுக் கொண்டார்.ஒரு குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு திருமணமாகியிருந்த தன் மகளோடும், அவரது கணவரோடும் மேடைக்கு வந்தனர். இரண்டு கால்களும் ஒரு விபத்தில் பதிக்கப்பட்ட நிலையில் தாங்குகோள்களோடு ஒருவர் தட்டுத்தடுமாறி மேடைக்கு வந்து கௌரவத்தைப் பெற்றுக் கொண்டார். ஒரு தொழிலாளியின் பெண் குழந்தை மேடையில் நடனமாடினார். இப்படியாகவும், இன்னுமாகவும் அது ஒரு தொழிற்சங்க கூட்டம் என்கிற வழக்கமான தோற்றத்திலிருந்து மிக வெகுவாக மாறுபட்டிருந்தது.தோழர் வி.பி.சிந்தனைப் பற்றி அ.சவுந்தரராசன் விவரித்துக் கொண்டிருந்த போது வழக்கமான தொழிற்சங்க கூட்டங்களைத் தாண்டிய ஒரு அமைதியும், உற்றுக்கவனிப்பும் தூக்கலாயிருந்தது. அவ்வப்போது சில குழந்தைகள் அழுகையும், பெற்றோர்கள் அதை சமாதானப்படுத்தும் முயற்சியும் இடையூறாக தெரியாமல் ஒரு குடும்ப நிகழ்ச்சியின் இயல்பான தன்மையாகவே இருந்தது.

விழா முடிந்த பிறகு போக்குவரத்து சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவரான ஜி.வேலுச்சாமி அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தேன். தொழிற்சங்க நிகழ்ச்சிகளில் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வது எப்போதிருந்து என்று கேட்ட போது, முதலில் குடும்ப உறுப்பினர்கள் போராட்டத்தில்தான் கலந்து கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு போராட்டங்கள் மட்டுமன்றி இத்தகைய நிகழ்ச்சிகளிலும் குடும்ப உறுப்பினர்கள் உற்சாகத்துடன் கலந்து கொள்வதை அவர் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடமிருந்த உற்சாகம் என்னையும் பற்றிக் கொண்டது.

2015-ஆம் ஆண்டு அங்கன்வாடி தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து சிஐடியு ஒரு போராட்டம் நடத்திய போது அந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர் ஜி.வேலுச்சாமியை போலீஸ் தாக்கி இழுத்து சென்றிருக்கிறது. போராட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் நான்கு வழிச்சாலையை முழுவதுமாக மறைத்துக் கொண்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர். ‘‘தோழரை கீழே இறக்கு, அதுவரையிலும் மறியல் தொடரும்’’ என போலீஸ் மிரட்டலுக்கு அஞ்சாமல் பெண்கள் தீரமாக கோஷமிட்டுள்ளனர்.அது மதுரை- கன்னியாகுமரி 4 வழிச்சாலை. இரண்டு பக்கமும் 4 வழிகளும் அடைபட்டு வாகனங்கள் முழுவதும் தேங்கி நின்றிருக்கின்றன. வேறு வழியின்றி காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் வைத்திருந்த தோழர் ஜி.வேலுச்சாமியை கீழே இறக்கி விட்டிருக்கின்றனர். அப்போதும் மறியல் விலக்கிக் கொள்ளப்படவில்லை. பிறகு காவல்துறை, ஜி.வேலுச்சாமியிடம் மறியலை கைவிடச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்ட பிறகு அவர் தொழிலாளிகளிடமும், பெண்களிடமும் மறியலை விலக்கிக் கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்பிறகே வாகனங்கள் போக்குவரத்தை தொடங்கியிருக்கின்றன.

இதை தோழர் வேலுச்சாமி குறிப்பிடுகிற போது குரலில் இருந்த நெகிழ்ச்சி உணர்வுப்பூர்வமானது.

ஆண்டுக்காண்டு குடும்ப உறுப்பினர்கள் வருகை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரு நாள் முழுவதும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், உரையாடல்களும் நடந்தன என்று அவர் பெருமையோடு தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகள் 150க்கும் மேற்பட்டோர் நாள் முழுவதும் கலந்து கொண்டதை அவர் குறிப்பாக தெரிவித்தார். முதலாவது போராட்டம் எப்போது துவங்கியது என்ற கேட்ட போது 1999-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தையொட்டி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இப்போது வற்றிக் கொண்டுள்ள பென்சன் நிதியத்தில் இந்த நிலை வருமென்று குறிப்பிட்டு அதை வலுப்படுத்த வேண்டுமென்று நடந்த போராட்டத்தில் தான் முதன்முதலாக சில தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதன் பிறகு, நியாயமற்ற முறையில் தொழிலாளர்களைப் பழிவாங்க ஊர் மாற்றம் செய்யப்பட்ட போது பல கட்டப் போராட்டங்கள், முறையீடுகள் அனைத்தும் தோற்றுப் போயிருக்கிறது. அதிகாரிகள் பேச மறுத்து பிடிவாதம் காட்டியுள்ளனர். இவையெல்லாம் பயனன்றுப் போன நிலையில் குடும்ப உறுப்பினர்கள் பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என்ற முடிவை அந்த சங்கம் மேற்கொண்டு முயற்சித்திருக்கிறார்கள். நிர்வாகத்தின் அடாவடித்தனம், கோரிக்கைகளின் நியாயம் இவற்றையெல்லாம் உணர்ந்து கொண்ட குடும்ப உறுப்பினர்கள்- ஏறத்தாழ பெண்கள் முழுவதுமாகஅந்த போராட்டத்திற்கு வந்திருக்கிறார்கள். வேறுவழியின்றி நிர்வாகம் பேசித் தீர்த்திருக்கிறது. போராட்டத்திற்கு பின்பு நிர்வாக இயக்குநரை சங்க நிர்வாகிகள் சந்தித்த போது பெண்கள் முற்றுகையைப் பற்றி அவர் குறிப்பாக பேசியிருக்கிறார்.

இப்போதும் கூட பல முக்கியமான போராட்டங்களின் போது தொழிலாளர்களின் குடும்ப பெண் உறுப்பினர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்வது குறித்து தோழர் வேலுச்சாமி சொல்லிக் கொண்டு வந்தார்.

சில தொழிற்சங்கங்களில் சங்கத்திற்கு நன்கொடை, கூட்டங்களில் கலந்து கொள்வது இவையெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்கு தெரியாமல் நடந்து கொண்டிருப்பது பலரது அனுபவம். ஆனால், இவர்களது அனுபவம் வித்தியாசமானதாய் உள்ளது. சங்க வேலைக்கு போகிறேன் அதனால் இன்று விடுப்பு எடுத்திருக்கிறேன் , சங்கத்திற்கு நன்கொடை தந்திருக்கிறேன், அதனால் சம்பளத்தில் இவ்வளவு குறைவு ஏற்பட்டுள்ளது என்று சொல்வதை பல குடும்பங்கள் அங்கீகரிப்பதை மிகுந்த பெருமிதத்தோடு அவர் சொல்லிக் கொண்டிருந்தார். அந்தப் பெருமித உணர்வு என்னையும் கூட பற்றிக் கொண்டது. இதன் தொடர்ச்சிதான் நவம்பர் 11 அன்று விருதுநகரில் நடந்த வி.பி.சி. நூற்றாண்டு விழா. அவர்கள் மாலை 7.30 மணிக்குள் முடித்து விட வேண்டுமென்று இலக்கு நிச்சயித்திருந்தார்கள். சிறிது சிறிதாக கால தாமதமாகி வேறு வழியின்றி தோழர் அ.சவுந்தரராசன் தன் பேச்சை முடிக்கிற போது 8 மணியாகி விட்டது. அவரது பேச்சு முழுவதும் வி.பி.சிந்தனின் தொழிற்சங்க போராட்டங்கள், அவரது உறுதிப்பாடு, பயிற்று முறை ஆகியவற்றைப் பற்றி அமைந்திருந்தது. இன்றைய தொழிற்சங்க உறுப்பினர்கள் பலருக்கும் சில இளம் தலைவர்களுக்கும் கூட வி.பி.சியை பற்றிய அறிமுகம் வேண்டியிருக்கும் நிலையில் அமர்ந்திருந்த பெண்கள் கொஞ்சம் கூட கலையாமல் மிகுந்த ஈர்ப்போடும், சில சமயங்களில் உணர்ச்சி ததும்பவும் உற்றுக் கவனித்திருந்தார்கள். நீண்ட பல ஆண்டுகளாக இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பழக்கப்பட்டிருப்பதையே இது காட்டியது.

அருப்புக்கோட்டையில் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு, உறவினர்களையெல்லாம் அவரது மனைவி அழைத்து, அவர்கள் யாரும் முன்வராத போது சங்கத்தோழர்களிடம் தெரிவித்து அவர்கள் உடனடியாக உதவி இருந்ததையும், இது போன்ற நிகழ்ச்சிக்கு வந்து குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு பல குடும்பங்களில் அத்தகைய நிலை ஏற்பட்டால் முதலில் சங்கத்தலைவர்களுக்கு தகவல் கொடுப்பதை வழக்கமாக்கியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு தோழர் ஜி.வேலுச்சாமி சொல்லிக்கொண்டிருந்தார்.

அந்த விழா உண்மையில் தோழர் வி.பி.சிந்தன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் பெருமைமிக்க விழாவாக இருந்தது என்பது ஒருபுறமிருக்க, தொழிற்சங்க இயக்கமும், அரசியல் இயக்கமும், கற்றுக் கொள்வதற்கான நல்ல அனுபவமாகவும் இருந்தது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் கலந்து கொள்ளாத எந்த ஒரு போராட்டமும் முழு வெற்றியைப் பெற்று விட முடியாது. பல சங்கங்கள்- போராட்டங்களுக்கு, அதிலும் குறிப்பாக அவர்களது பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக கூட சங்க உறுப்பினர்களை திரட்டுவதற்கு மிகுந்த சிரமப்படும் நிலையில் விருதுநகர் கோட்டத்தில் சிஐடியு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தின் இந்த முயற்சியும், அதில் அவர்கள் பெற்றுள்ள வெற்றிகளும் மிக முக்கியமானவை.

தொழிற்சங்கங்கள் இத்தகைய திரட்டல்களுக்கு முயற்சிப்பது பெருமளவிற்கு அவர்களுக்கு உதவுவதோடு , சங்கங்கள் ஜனநாயகப்படுவதற்கும் பேருதவியாக, நிர்ப்பந்தமாக அமையக்கூடும். பல அரசியல் இயக்கங்களிலும், முயற்சிகளிலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பொதுவாக முன்னிலை வகித்தே வந்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் அவர்களுக்குள்ளும் விருதுநகர் கோட்டம் வழிகாட்டுகிறது. பாராட்டுக்கள்.

Leave A Reply

%d bloggers like this: