விருதுநகர், நவ.16-
விருதுநகரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் -சிஐடியு சார்பில் தோழர் வி.பி.சிந்தன் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: வர்க்கப் போராட்டம் என்று வந்துவிட்டால், முதலாளி வர்க்கம், தங்களது நலனை விட்டுக் கொடுக்காது. எனவே,தொழிலாளி வர்க்கம் உறுதியுடன் போராட வேண்டும் என அடிக்கடி தோழர் வி.பி.சிந்தன் கூறுவார். தீக்கதிரை முதன்முதலில் வார இதழாக கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டவர். என்.சி.பி.எச் இயக்குநராகவும் திகழ்ந்துள்ளார். அவர் ஒருதத்துவ மேதை. சிறு வயதிலேயே சமஸ்கிருதம் தெரியும். வேதங்களை படித்துள்ளார்.

இந்திய தத்துவ மரபில் முற்போக்காளர்கள் பற்றி தெரிவிப்பார். எதைப்பற்றி பேசினாலும் அதுவாக அவர் இருப்பார். எல்லாத்துறைகளிலும் அவருக்கு பாண்டித்தியம் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தோழன். போராட்டக்காரன். தொழிலாளி வர்க்கத்திற்காக வலுவான போராட்டத்தை நடத்திய காரணத்தால் வி.பி.சிந்தன் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும், சிறைக் கைதிகளை கவுரவமாக நடத்த வேண்டும் என போராட்டங்களை நடத்தினார்.அந்த சூழ்நிலையில், கடுமையான அடக்கு முறையிலும் உரிமைகளை அவர் விட்டுக் கொடுக்கவில்லை. பலமுறை மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார்.

உதாரணமாக, ஆவடி தொழிற் சாலையில் வேலை நிறுத்தம் நடைபெற்ற போது, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்க பாதுகாப்பு வளையத்தை தாண்டி, ஆலைக்குள் குசேலருடன் சென்றார். அப்போது, காவல்துறையினர் தோழர் விபிசியை தேடித்தேடி அடித்தனர். அவரை, தொழிலாளர்கள் தங்களது உயிரைக்கொடுத்து காப்பாற்றினர். பின்பு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை சந்திக்க நான் சென்றேன். அப்போது, அவரது தொடையில் போலீசின் பூட்ஸ் கால் தடம் அப்படியே ரத்தம்கட்டிப் போய் இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் பல பொதுத் துறை நிறுவனங்களில் நிர்வாக ஆதரவு சங்கம் மட்டுமே இருக்கும். இதை எதிர்த்து நெய்வேலி உள்ளிட்ட பல இடங்களில் தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தினார்.

இதனால், பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தார். அவர், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களையும் திரட்டியதோடு, எல்லோரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என போதித்துள்ளார்.  1967ல் நாகப்பட்டினம் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது, பொறுப்பாளராக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. பல்வேறு கட்சி தலைவர்கள் வி.பி.சி மீது மிகுந்த மரியாதையுடன் இருந்தனர். அவருக்கு, திரைப்பட நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், ம.பொ.சி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் தொடர்பு இருந்தது. அதற்கு காரணம் அவரது மேதமை. அரசுப் போக்குவரத்தில் 240 நாட்கள் தினக் கூலியாக பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும் என கூட்டுப் போராட்டங்களை நடத்தினார்.

தினக் கூலி தொழிலாளர்களுக்கான போராட்டமா? என சிலர் பரிகாசம் செய்தனர். அப்போது, ஆமாம் அவர்களுக் காகத் தான் போராட்டம் என பகிரங்கமாக தெரிவித்தார். 1977 இல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம். எம்.ஜி.ஆர். மக்களை வைத்து சந்திப்பேன் என தெரிவித்தார். அதையும் மீறி போராட்டம் வெற்றி கரமாக நடந்தது. ஒரு கட்டத்தில் அரசு, எங்கு பயணம் செய்தாலும் 30பைசா மட்டுமே கட்டணம் என அறிவித்தது. பின்பு இலவசம் எனக் கூறினர். ஆனால், இறுதியில் நேரடியாக அரசுடன் முதன்முறையாக பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. போராட்டத்தின் காரணமாக, ஜாமீனில் வெளிவர முடியாதபடி ராஜதுரோக வழக்கு வி.பி.சி, ஹரிபட், குசேலர், பி.ஆர்.பரமேஸ்வரன் ஆகியோர் மீது போடப்பட்டது. பின்பு, தனிமைச் சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர். அப்போது தமிழகமே பெரும் போராட்ட களமாக மாறியது. அதன் தளபதியாக தோழர் வி.பி.சி திகழ்ந்தார்.

1972 ல் வி.பி.சி கொல்லப்படுவார் என திமுகவினர் நோட்டீஸ் ஒட்டினர். எனவே, அப்போதைய காவல்துறை ஐ.ஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொள்ள டாக்சியில் சென்றார். அந்த டாக்சிபழுதடைந்தது. எனவே, அவர் பேருந்தில் பயணம் செய்தார். பேருந்தை வழிமறித்த திமுகவினர், அவரை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தினர். முதுகில் குத்திய கத்தி, அவரது நுரையீரலில் 3 இன்ச் ஆழத்திற்கு கிழித்தது. இறந்து விட்டார் என அங்கேயேபோட்டு விட்டு சென்றுவிட்டனர். பின்பு, தோழர்களுக்கு தகவல் தெரிந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, காப்பாற்றப்பட்டார். அவருடைய மன உறுதிதான், அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வந்தோம். அவரை உயரமான இடத்தில் நிற்கவைத்து பேசுமாறு தெரிவித்தோம்.

“நிறைய பேச முடியவில்லை. ஏராளமானரத்தம் போய் விட்டது, மிச்சமுள்ள ரத்தமும்
உங்களுக்காகத்தான்“ என தெரிவித்தார். “ எல்லோருக்காகவும் வாழ்வது தான் இன்பம்“ என வாழ்ந்து காட்டியவர். மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என போராடியவர். தற்போது, மதத்தின் பெயரால், மாட்டின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடைபெறுகிறது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதே தோழர்வி.பி.சி யின் லட்சியத்தை நாம் முன்னெடுத்துச் செல்வதாக இருக்கும் என தெரிவித்தார்.  முன்னதாக விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஏ.சுந்தரராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் எம்.வெள் ளைத்துரை வரவேற்புரையாற்றினார். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் துவக்கி வைத்து பேசினார். முடிவில் கார்மேகம் நன்றி கூறினார். மேலும் இதில், மத்திய சங்க உதவித் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், சிஐடியு மாநில செயலாளர் எம்.மகாலட்சுமி, மத்திய சங்க நிர்வாகிகள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply