ராய்ப்பூர்;
உட்காரவும், நடக்கவும் முடியாத சுமார் 1200 நோயாளிகளை அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிவிட்டு தனது மருமகளுக்கு அங்கு பிரசவம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார் பாஜகவைச் சேர்ந்த  சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமண்சிங். பாஜக முதல்வர் தனது மருமகளின் பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையை தேர்வு செய்ததை அவரது எளிமையாக சித்தரித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. தனது மருமகளுக்கு சிறப்பு சிகிச்சை கிடைப்பதற்காக அவர் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டார். அதன்படி தனியாக அறை தயாராக்கப்பட்டது.

அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்காக மேலும் 3 அறைகளை ஏற்பாடு செய்துள்ளார். அதோடு இரண்டாவது மாடியில் உள்ள அந்த அறைகளின் அருகில் 700 படுக்கைகள் கொண்ட வார்டுகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணிகள் உட்பட 1200 நோயாளிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது உட்காரவும், நடக்கவும் முடியாத நோயாளிகள் நடைபாதைகளில் விழுந்து கிடந்தனர்.

சனிக்கிழமையன்று தனது பேரக்குழந்தையை காண முதல்வர் ரமண்சிங் அந்த மருத்துவமனைக்கு சென்றார். அப்போது முதல் அமைச்சரின் பாதுகாப்புக்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக இரண்டாவது மாடியில் கிடந்த அனைத்து நோயாளிகளும் முதல் மாடிக்கு மாற்றப்பட்டனர்.

இதோடு முதல் மாடியில் படுத்திருந்த நிறைமாத கர்ப்பிணிகளும், பிரசவித்த தாய்மார்களும் ஒரு கட்டிலுக்கு இருவர் வீதம் படுக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.
படுக்கைகளை விட்டு வெளியேற்றப்பட்ட தங்களது சிரமங்களை காதுகொடுத்து கேட்க மருத்துவமனையில் எவரும் முன்வரவில்லை என அவர்கள் தெரிவித்ததை என்டிடிவி செய்தித் தொகுப்பாக வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் ரமண்சிங்கின் இந்த நடவடிக்கைக்கு எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.