காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 21 நாட்களாக ஸ்கேன் எடுக்கும் மருத்துவர் இல்லாததால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் நகரம் பட்டு சேலைக்கும் சுற்றுலாவிற்கும் மிகவும் பெயர் பெற்றது. இங்குள்ள  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஸ்கேன் எடுக்க முடியாமல் கடந்த 21 நாட்களாக   நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இருந்த இரண்டு மருத்துவர்களில் ஒருவர் பணியிட மாறுதல்  பெற்று  சென்றுவிட்டார்.  மற்றொரு மருத்துவர் உமாமகேஷ்வரி என்பவருக்கு ரேடியேஷன் தாக்குதல் இல்லாமல் இருக்க  ஒரு மாதம் கட்டாய விடுமுறையில் சென்றுள்ளார்.

இதனால் நோயாளிகள் தனியார் ஸ்கேன் சென்டருக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவற்றை இங்குப் பணிபுரியும் தொழிற்நுட்பனர் செல்வகணேஷ் எடுத்து 5 கி.மீ தொலைவில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் உள்ள மருத்துவரிடம் காண்பித்து ரிசல்ட் பெறும் நிலை உள்ளது. தலைமை மருத்துவமனையாக இருந்தாலும் அதற்கு உரிய எந்த வசதிகளும் இதில் இல்லை என்று நோயாளிகள் கூறினர்.

Leave A Reply