பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமியையும் குடும்பத்தாரையும் விளம்பர நோக்கில், புகைப்படம் எடுத்து செய்தி அனுப்பிய கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவருக்கு அரசு நிவாரண நிதியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், நேரில் வழங்குவதாக புகைப்படத்துடன்கூடிய செய்திக்குறிப்பு அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பாலியல் வன்முறைக்கு உள்ளானவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியே தெரியும்படி அடையாளம் காட்டக் கூடாது என்ற குற்றவியல் சட்டத்தை, அப்பட்டமாக இந்த காவல்துறை உயர் அதிகாரி மீறி செயல்பட்டிருக்கிறார்.

தாக்குதல்கள், வஞ்சிக்கப்படுதல், தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிலிருந்து ஊனமுற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஊனமுற்றோருக்கான புதிய உரிமைகள் சட்டத்தையும் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீறியுள்ளார்.

புகைப்படம் எடுத்து விளம்பரம் தேடும் ஆர்வத்தில் இருந்த இந்த அதிகாரிக்கு, பாதிக்கப்பட்ட கடும் ஊனமுற்ற அந்த சிறுமிக்கு சக்கர நாற்காலியில் அழைத்துவர ஏற்பாடு செய்யக்கூட அக்கறை இல்லை என்பதை புகைப்படத்தைப் பார்த்தால் அறிய முடியும்.   இது, அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.  ஊனமுற்றோர் புதிய சட்டத்திற்கும் எதிரானது. மிகக் கேவலமான விளம்பர நோக்கத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் கண்ணியத்தை மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரியே சீர்குலைத்து உள்ளார். சட்டத்தைப் பராமரிக்க வேண்டிய அதிகாரியே, சட்டத்தை மீறுவது கடும் கண்டனத்துக்கு உரியது.

எனவே, தவறு செய்துள்ள மகேஷ்குமார் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கேட்டுக்கொள்கிறது.

பாலியல் குற்றவியல் சட்ட விதிகளையும், ஊனமுற்றோருக்கான சட்ட விதிகளையும் காவல்துறை உயர் அதிகாரிகள் குறைந்தபட்ச அளவில்கூட தெரிந்திருக்கவில்லை என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. எனவே, அனைத்து மட்டக் காவல்துறையினருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு வகுப்புகளை எடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடும்படியும் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: