(மத்திய அரசாங்கத்தின் ரூபாய் நோட்டு செல்லாது என்கிற முடிவின் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கரன்தாப்பர் கேட்ட கேள்விகளுக்கு, சீத்தாராம் யெச்சூரி பதில்கள் அளித்துள்ளார். அவை இணைய இதழ் தி ஒயர் ஒளிநாடாவாக வெளியிட்டுள்ளது. அதன் சாராம்சங்கள் வருமாறு):

கரன் தாப்பர்: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை ஓகோ என்று பாராட்டி மத்திய நிதி அமைச்சர் அவர்கள் அது நாட்டின் பொருளாதாரத்தில் இருந்த ஊழலை மிகவும் சரியச் செய்துவிட்டது என்று சொல்லியிருக்கிறாரே, என்ன கூறுகிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அருண் ஜெட்லி சொன்ன அர்த்தத்தில் அல்ல. அதற்கு நேர்மாறான விதத்தில் சரிவினை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, திடீரென்று கடந்த ஓராண்டில் மிகவும் சரிந்துவிட்டது. குறிப்பாக விவசாயத்தை அடுத்து, நாட்டின் பொருளாதாரத்தில் சரிபாதி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளித்துவந்த முறைசாராத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதில் ஈடுபட்டு வந்த 80 சதவீதத்திற்கும் அதிகமான  தொழிலாளர்களின் வேலைகளைப் பறித்து அவர்களை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிட்டது. இவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தில் மிகச்சரிவினை ஏற்படுத்தி இருப்பது உண்மைதான்.

கரன் தாப்பர்: அடுத்து, ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் நாட்டில் புழங்கிவந்த கள்ளநோட்டுகளை தடுத்துவிட்டோம் என்று பிரதமர் மோடி சொல்லி இருக்கிறாரே!

சீத்தாராம் யெச்சூரி: இதுவும் சரியல்ல. ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் கள்ள நோட்டுகளை ஒழித்திட முடியாது. உண்மையில் இந்திய புள்ளிவிவர நிலையம் (Indian Statistical Institute) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி இந்தியாவில் வெறும் 0.028 சதவீதம்தான் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதனை ஒழித்துக்கட்டுவதற்காக, மலையைக் கிள்ளி எலியைப் பிடிப்பதுபோல இந்த அரசாங்கம் நாட்டின் புழக்கத்திலிருந்த 85 சதவீத நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது. உண்மையில் இவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ஒருசில நாட்களிலேயே 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பெங்களூருவில் அச்சடிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்ததை நாம் பார்த்தோம்.

கரன் தாப்பர்: அடுத்து, அரசுத்தரப்பில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் இடதுசாரி அதிதீவிரவாதம் கட்டுக்குள் வந்ததென்றும், அதேபோல் காஷ்மீரில் செயல்பட்டுவந்த பயங்கரவாதிகளுக்குப் பணம் செல்வது தடுக்கப்பட்டுவிட்டது, அதனால் அவர்களின் தாக்குதல்களும் குறைந்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறதே!

சீத்தாராம் யெச்சூரி: இதுவும் சரி என்று சொல்வதற்கில்லை. இடதுசாரி அதிதீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடைமுறை. அதனை அரசியலாகத்தான் எதிர்கொள்ள முடியும். அடுத்து, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வது தடுக்கப்பட்டுவிட்டது என்று கூறுவதும் தவறான ஒன்றேயாகும். பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளை நேரடி ரொக்கப்பரிவர்த்தனைமூலம் செய்வதில்லை. இன்றைய தினம் இணைய வழியாகவும், அதிநவீன ஆயுதங்கள் மூலமாகவும் பயங்கரவாத நடவடிக்கைகள் சர்வதேச அளவில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய சூழலில் இவ்வாறு ரொக்கப் பரிவர்த்தனை தேவையே இல்லை. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இந்த அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் இரட்டிப்பாகி இருக்கின்றன. இது உள்துறை அமைச்சகம் தந்துள்ள விவரங்கள்.

இவ்வாறு மத்திய அரசு சொல்வதற்கும், நாட்டில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவித்தபிறகு நடந்துள்ளவற்றிற்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. மேலும் அரசு சார்பில் உள்துறை அமைச்சகம் சொல்வதற்கு நேர் முரணாக நிதி அமைச்சரின் அறிக்கை காணப்படுகிறது.

கரண் தாப்பர்: பின் என்னதான் உண்மையான காரணம்? கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவந்ததாகச்சொன்னார்கள், அதேபோன்று பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற்காகவும் கொண்டுவந்ததாகச் சொன்னார்கள். இரண்டுமே நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள்.

சீத்தாராம் யெச்சூரி: இவர்கள் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததன் மூலம் உண்மையில் கறுப்புப் பணம் முழுமையாக வெள்ளைப் பணமாக மாறிவிட்டது. கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள், நாட்கூலிக்கு ஆட்களை அமர்த்தி, மிக எளிதாக வங்கிகளில் தங்களிடமிருந்த கறுப்புப்பணம் முழுவதையும் வெள்ளையாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள். வங்கிகளுக்கு நாட்டில் உள்ள பணத்தில் 99 சதவீதத்திற்கும் மேலாக வந்துவிட்டது என்று இந்திய ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. இதன் பொருள் என்ன? கறுப்புப்பணமே நாட்டில் இல்லை என்பதுதான். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசு அறிவித்த சமயத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட அரசு வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல், நாட்டில் உள்ள சுமார் 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்பணம் அரசின் கஜானாவிற்கு வரும் என்று சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். ஆனால் நடந்தது என்ன? இவர்களின் நடவடிக்கையின் மூலம் நாட்டிலிருந்த கறுப்புப்பணத்தை சட்டபூர்வமானதாக இவர்கள்  மாற்றிவிட்டார்கள்.  இதில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவெனில் நாட்டில் கறுப்புப் பணம் என்பது ரொக்கமாக 6 சதவீதத்திற்கும் மேல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும், இவை தங்கமாக அல்லது ரியல் எஸ்டேட்டாக இருப்பதாகத்தான் கறுப்புப் பணம் குறித்த பல மதிப்பீடுகள் கூறுகின்றன.

மேலும் கறுப்புப் பணம் என்பதற்கு நிறம் எதுவும் கிடையாது. அது தனியே ஓர் இருப்பாக (ஸ்டாக்-ஆக) இருக்காது. அது புழக்கத்தில் இருந்துகொண்டே இருக்கும். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அதனைப் பலமடங்கு அதிகரித்திடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

இந்த சமயத்தில் அரசாங்கம் வேறு ஒரு வேலையும் செய்தது. மக்களிடம் தங்கம் வாங்குவதற்கு இருந்த கட்டுப்பாட்டை அதிகரித்தது. 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் தங்கம் வாங்கலாம் என்று இருந்த கட்டுப்பாட்டை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தியது. அவ்வாறு வாங்குவதற்கு அவர்கள் ஆதார் அட்டையைக் கூட காட்ட வேண்டும் என்ற நிபந்தனையும்கூட கிடையாது. இதனால் கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள் வங்கிகளுக்குக்கூட வராமல் தங்கமாக மாற்றிக் கொண்டு விட்டார்கள்.

கரண் தாப்பர்: அருண்ஜெட்லியும், பிரதமர் மோடியும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறியதன் மூலமாக நாட்டிலிருந்த கறுப்புப் பணம் முழுவதும் வங்கிகளுக்கு வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களே!

சீத்தாராம் யெச்சூரி: இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் என்ன கூறினார்? கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் இதிலிருந்து மீள்வதற்கு வழி கண்டுபிடித்துவிடுவார்கள் என்றார். அதுதானே நடந்தது. வங்கிகளில் மாற்றுவதற்கு ஆட்களை நியமித்தார்கள். அவர்கள் செல்லாத நோட்டுகளைக் கொடுத்துவிட்டு, புதிய நோட்டுகளை கறுப்புப்பண பேர்வழிகளிடம் கொண்டுசென்று கொடுத்துவிட்டு அதற்கான கமிஷனைப் பெற்றுக் கொண்டார்கள். அரசாங்கத்தால் என்ன செய்ய முடிந்தது?

கரன் தாப்பர்: அரசாங்கத்திற்கு வரி வருவாய் அதிகமாக வந்துவிட்டது என்றும், முன்பை விட வருமானவரி கட்டியவர்கள் இப்போது அதிகம் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறாரே!

சீத்தாராம் யெச்சூரி: ஏழை மக்களிடமிருந்தும், ஊதியம் பெறும் மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்தும் வரி வசூலைக் கறாராக செய்துவிட்டார்கள். ஆனால், கார்ப்பரேட்டுகள் மற்றும் பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து வரி வருவாயை செய்திட மறுக்கிறார்கள். ஓர் அரசு பொருளாதார ரீதியாக செம்மையாகச் செயல்பட வேண்டுமானால், திட்டமிடும்போது அது நிர்ணயித்திடும் வரியை முழுமையாக வசூலித்திட வேண்டும். அப்போதுதான், திட்டச் செலவினங்களைச் செய்திட முடியும். இவ்வாறு அரசுத்தரப்பில் கூறப்பட்டுள்ள போதிலும் அவர்கள் இதுவரை வசூலித்துள்ள வரிவருவாய், நிதியாண்டு முடிய இருக்கிற இத்தருணத்தில், மொத்த வரிவருவாயில் 40 சதவீதம்கூடக் கிடையாது. பின் எப்படி இந்த அரசு தன்னுடைய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்? அதுமட்டுமல்ல, இப்போது குஜராத் தேர்தலையொட்டி ஜிஎஸ்டி-யில் நிறைய பொருள்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள்.

அரசுத்தரப்பில் கணக்கில் இல்லாத பணம் எல்லாம் வங்கிக்கு வந்துவிட்டது என்று மார்தட்டிக்கொண்டாலும், எதார்த்த நிலைமை என்ன என்று பாருங்கள். மக்களுக்கு இதனால் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது?  இவ்வாறு கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியதன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டிடவில்லை.

கரண் தாப்பர்: மேலும் அருண் ஜெட்லி, கறுப்புப்பணம் வைத்திருந்தவர்கள், தங்கள் பணத்தை எல்ஐசி பிரிமியத்திலும், மியூசுவல் பண்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறாரே!

சீத்தாராம் யெச்சூரி: நீங்கள் மக்களை கட்டாயப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் சேமிப்பை நோக்கித்தள்ளமுடியும். பொருளாதார நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில், மக்கள் தங்களிடமுள்ள பணத்தை முதலீடு செய்வதற்குப் பதிலாக, சேமிப்பில் போடத்தான் விரும்புவார்கள்.  நாட்டில் சரியான முறையில் பொருளாதார நடவடிக்கைகள் இல்லை என்பதன் பிரதிபலிப்புதான் இது. மேலும் மக்கள் முதலீடு செய்வதற்குப் பயந்ததற்கு மற்றுமொரு முக்கிய காரணம், நாட்டிலுள்ள மக்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவிற்கு வருமானம் இல்லாதிருப்பதுதான். மக்களிடம் வருமானம் இல்லாதிருக்கையில் எப்படி முதலீடு செய்து, உற்பத்தியைப் பெருக்க முயற்சிப்பார்கள்?

கரண் தாப்பர்: அப்படியென்றால் இது பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: ஆம்.

கரண் தாப்பர்: ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தபோது அவர்கள் சொல்லிய நான்காவது காரணத்திற்கு இப்போது வருகிறேன். மக்கள் ரொக்கப் பரிவர்த்தனையிலிருந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்றும், அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி சொன்னாரே, அது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: இந்த டிஜிடல்  பரிவர்த்தனை கம்பெனிகள் மிகப் பெரிய அளவில் லாபம் ஈட்டியிருப்பதைத் தவிர இதனால் வேறு என்ன நன்மை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது? இப்போது ஜிஎஸ்டி வந்தபின்னர் இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கரண் தாப்பர்: இவ்வாறு ரூபாய் நோட்டு செல்லாது என்று அரசாங்கம் அறிவித்ததற்கான நான்கு காரணங்களும் – அதாவது, கள்ள நோட்டுகளைக் கட்டுப்படுத்துவது, பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதை தடுத்து நிறுத்துவது, கறுப்புப்பணத்தை வெளிக்கொணர்வது மற்றும் பொருளாதார நடவடிக்கையில் ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைப்பது – ஆகிய காரணங்கள் அனைத்துமே தோல்வி அடைந்துவிட்டது என்கிறீர்களா?

சீத்தாராம் யெச்சூரி: நிச்சயமாக. உண்மையில் இம்முடிவின்மீது மக்கள் செய்த தியாகங்கள் மிக மிக அதிகமாகும். நூற்றுக்கணக்கானவர்கள் வங்கிகளில் வரிசைகளில் நின்றபோது மரித்துப்போனார்கள், மிகப்பெரிய அளவில் வேலையிழப்புகள். பல லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து வீதியில் நிற்கிறார்கள். சிறிய மற்றும் நடுத்தரத்தொழில்கள் மிகக் கடுமையான முறையில் நசிந்துவிட்டன. ஊழல் குறைந்திடவில்லை. மாறாக 1000 ரூபாய் லஞ்சத்திற்காக வாங்கியவர்கள் இவர்கள் 2000 ரூபாய் நோட்டு வந்தபின், அதனை 2000 ரூபாயாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள். விவசாயம் முழுமையாக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

கரண் தாப்பர்: இந்நடவடிக்கையின் மூலம் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அனைத்தும் குறைந்துவிட்டது என்கிறீர்கள், இல்லையா? இதுவெல்லாம் தற்காலிகமானதுதான்,  குறுகிய காலத்திற்குத்தான், பின்னர் நாட்டின் பொருளாதாரம் பிரகாசமாக இருக்கும் என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்களே!

சீத்தாராம் யெச்சூரி: பொருளாதார நடவடிக்கைகள் பழைய நிலைக்குத் திரும்பும் என்பது அநேகமாக மிகமிகக் கடினம். அதற்கான பொருளாதார சூழல் இருப்பதாக என்னால் பார்க்க முடியவில்லை.

கரண் தாப்பர்: ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு இவ்வாறு படுதோல்வி அடைந்துவிட்டது என்று சொல்கிறீர்கள். இதனால் எவருக்கும் எந்த நன்மையும் கிடையாதா?

சீத்தாராம் யெச்சூரி: இம்முடிவு படுதோல்வி அடைந்துவிட்டது என்பது உண்மை. எவருக்கும் பயனளிக்கவில்லையா என்று கேட்டால் நீங்கள் யார் பக்கம் நிற்கிறீர்கள், என்பதைப் பொறுத்தது அது. உதாரணமாக முன்பு ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதனை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றவர்களுக்கு இது இலாபம்தான்.

(தமிழில்: ச. வீரமணி)

 

Leave A Reply

%d bloggers like this: