பனாஜி;
பெற்றோர் உள்ளிட்டோருக்குத் ஆபாச படம் பார்ப்பது பற்றியும், மாட்டிக் கொள்வோம் என்று தெரிந்தால், சமயோசிதமாக எப்படி தப்பிக்கலாம் என்பது பற்றியும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளார்.கோவாவில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில்தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விக்கு மனோகர் பாரிக்கர் பதிலளித்தார். அப்போது, “நீங்கள் சிறுவயதில் எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?” என்று மாணவர்கள் எழுப்பிய கேள்விக்குத்தான், ரொம்ப பெருமையாக “ சாதாரண படங்களை மட்டுமல்ல; அந்த காலகட்டத்தில் வந்த அடல்ட் (வயது வந்தோருக்கு மட்டுமான ) படங்களையும் பார்த்தோம்” கூச்சமின்றி பதிலளித்துள்ளார்.

ஒரு பிரபல அடல்ட் படத்திற்கு தானும், தனது சகோதரரும் சென்றிருந்ததாகவும், படத்தின் இடைவேளையின்போது, விளக்குகளைப் போட்டபோது, தங்களின் குடும்பத்திற்கு நெருக்கமான பக்கத்து வீட்டுக்காரர் அருகில் அமர்ந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் கதையடித்துள்ள மனோகர் பாரிக்கர், ஆனால், மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? என்றும் விரிவுரை ஆற்றியுள்ளார்.“நானும் எனது சகோதரர் அவ்தூத்தும் உடனடியாக திரையரங்கை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டோம்; வீட்டுக்கு செல்லும் வழியிலே அம்மாவிடம் என்ன (பொய்) சொல்லலாம் என யோசித்து விட்டோம்; வீட்டுக்கு சென்றவுடன் எங்கள் அம்மாவிடம், ‘நாங்கள் ஒரு படத்துக்கு சென்றோம்; அந்தப்படம் மிகவும் ஆபாசமாக இருந்தது; அதனால் நாங்கள் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டோம்’ என்று கூறிவிட்டோம்; அடுத்தநாள் நாங்கள் எதிர்பார்த்தது போலவே பக்கத்து வீட்டுக்காரர், எங்களை ‘அடல்ட் படம்’ ஓடும் திரையரங்கில் பார்த்ததாக எங்கள் அம்மாவிடம் கூறினார்; அப்போது எங்கள் அம்மா, ‘அவர்கள் எந்தப்படத்திற்கு சென்றார்கள் என்று எனக்கு முன்பே தெரியும்; ஆனால், நீங்கள் ஏன் அந்தப் படத்திற்கு சென்றீர்கள்?’ என்று கேட்டு விட்டார். நாங்கள் தப்பித்துக் கொண்டோம்” என்று சாதனை போல கூறியுள்ளார்.இதன்மூலம், மாநில முதல்வராகிய தான் கூறும் ‘நீதி’ என்னவென்றால், “சில பிரச்சனைகளை சமாளிக்க முன்கூட்டியே முறையாக திட்டமிட வேண்டும் என்பதுதான்” என்றும் அசராமல் கூறி, மாணவர்களையும், ஆசிரியர்களையும் மனோகர் பாரிக்கர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.