தமிழகத்தில் குளிர்பதன முறையை அனைத்து மாவட்டங்களிலும் அரசே ஏற்படுத்தினால் ஏராளமான பழங்கள் காய்கறிகள் அழுகி வீணாவதைத் தடுக்கமுடியும் என்று  தமிழ்நாடு வழைப்பழ உற்பத்தியாளர்கள் சம்மேளன நிர்வாகி ஏ.ஆர்.கருப்பையா கூறியுள்ளார்.

குளிர் பதன தொழில்நுட்பம் குறித்த ஐ.சி.இ 2017 என்ற தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக மையத்தில் நவ.17.18 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் வாழை விவசாயிகள் 100 பேர் சேர்ந்து காயைப் பதப்படுத்தி விற்பனை செய்வதால் அவர்கள் ஈட்டும் வருவாயும் அதிகரித்துள்ளது என்றார். திண்டிவனம் அருகில் மாநில அரசின் சார்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டு வருவதாகவும் அதுபோல மாவட்டந்தோறும் அமைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஐசிஇ இயக்குநர் அடுல் கண்ணா பேசுகையில், ஐசிஇ-வை பொறுத்தவரை குளிர்பாதன தொழில்நுட்பத்துறையில்  சமீபத்திய தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள், அரசு கொள்கைகள் தொடர்பாக விவாதிக்க இதுபோன்ற மாநாடு நடத்தப்படுகிறது என்றார்.  இத் தொழிலில் தற்போது என்ன நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்தமாநாடு உற்பத்தியாளர்களுக்குப் பயன்படும் என்றும் அவர் கூறினார்.

குளிர்பதன வசதியைச் சிறு விவசாயிகள் பயன்படுத்தும் போது மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும் மாநாட்டில் நிபுணர்கள் உரையாற்ற உள்ளனர் என்றார். அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் இதுதொடர்பாக பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது 10 சதவீதம் அளவே காய்கறிகள், பழங்கள் பதப்படுத்தப்படுகிறது என்றும் இது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 80 விழுக்காடாக உள்ளது என்று தமிழ்நாடு குளிர்பதன மையங்களின் செயலாளர் ஏ.வி.முகுந்தன் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: