மதுரை
கார்ட்டூனிஸ்ட் பாலாவிடம் நெல்லை குற்றப்பிரிவு காவல் துறையினர் வரும் நவம்பர் 29ம் தேதிவரை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை குற்றப்பிரிவு காவல் துறையினாரால் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த கார்ட்டூனிஸ்ட் பாலா மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், `நான் சென்னையில் வசித்துவருகிறேன். 23.10.17  அன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தார் தீக்குளித்துப் பலியாகினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 24-ம் தேதி ஒரு கார்ட்டூன் வரைந்து என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில், தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று, தீக்குளிப்பு சம்பவத்தைப் பார்ப்பதுபோல சித்திரித்திருந்தேன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில், என்மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன்படி வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி, சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் என்னை இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்தார். இந்த வழக்கின்படி, நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. என்னைக் கைதுசெய்தது இயற்கை நீதிக்கு முரணானது. ஆகவே, என் மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என பாலமுருகன் என்ற கார்ட்டூனிஸ்ட் பாலா, தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க வரும் நவ.29ம் தேதி வரை நெல்லை குற்றப்பிரிவு போலீசாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: