தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள்  பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் “மதச்சார்பற்ற அரசு” எனும் நமது அரசமைப்பு வகுத்துள்ள நல்ல நெறிமுறைக்கு  எதிராகப் பேசியிருக்கிறார். “சுதந்திரத்திற்குப் பிறகு மதச்சார்பின்மை  என்ற வார்த்தை மிகப் பெரிய பொய்யாகி விட்டது. இதை உருவாக்கியவர்களும் பயன்படுத்தியவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டும். எந்த அமைப்பும் மதச்சார்பின்மையாக இருக்க முடியாது”.

தனிமனிதர்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்று நமது அரசமைப்பு கூறவில்லை. குடிமக்களின் மத நம்பிக்கை உரிமையை அது அங்கீகரித்துள்ளது. அது சொல்லுவது எல்லாம் அரசு எனும்  கட்டமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதுதான்.

கடந்த காலங்களில் அரசுகள் மதச்சார்புடையவையாக இருந்து மக்களுக்கு தந்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அதனால்தான் நவீன காலத்தில் “மதச்சார்பற்ற அரசு” எனும் கருத்தியல் நடப்புக்கு வந்தது. அதிலும் பல மதங்களைப் பின்பற்றுவோர் இருக்கும் நமது இந்தியாவிற்கு அதுவே மிகப் பொருத்தமானது. மதச்சார்பு அரசு என்பது  பெரும்பான்மை மதத்தவரது அரசாகி சிறுபான்மை மதத்தவர்களது  உரிமைகளைப் பறிக்கும் வேலையைச் செய்யும்.

உ.பி முதல்வரின் ஆசை என்னவோ அதுதான், இங்கு “இந்து ராஷ்டிரம்” என்ற பெயரில் பழைய வேதமதச் சார்பு அரசை உருவாக்கி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உரிமைகளை மட்டுமல்ல இந்து மதத்தில் இருக்கக்கூடிய இதர பிரிவினரின் உரிமைகளையும் பறிப்பதுதான். அதனால்தான் மதச்சார்பற்ற அரசு எனும் காலத்திற்கேற்ற கோட்பாட்டின் மீது இவ்வளவு வன்மத்தை காட்டியிருக்கிறார்.

அது பொய் அல்ல, நமது அரசமைப்பு முகவுரையில் இருக்கும்  மகத்தான மெய். அதை உருவாக்கியவர்களும் பயன்படுத்தியவர்களும்  நமது நாட்டிற்கு நல்லதொரு சேவையைச் செய்திருக்கிறார்கள். மன்னிப்பு கேட்க வேண்டியவர்கள் அவர்கள் அல்ல. அதே அரசமைப்பின்  பெயரால் முதல்வராகப் பதவியேற்றுவிட்டு “எந்த அமைப்பும் மதச்சார்பின்மையாக இருக்க முடியாது” என்று அதற்கு முற்றிலும் முரணாகப் பேசுகிற  யோகி ஆதித்யநாத் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

சொல்லப்போனால், முதல்வர் பதவியிலிருந்து யோகி விலக வேண்டும். அரசமைப்பு சட்டத்தின் ஒரு முக்கிய கூறை ஏற்காதவர், அதை எதிர்த்து காழ்ப்புணர்வோடு பேசுகிறவர் அந்தப் பதவியில் நீடிக்க தகுதி உடையவர் அல்ல.

நமது அரசமைப்பு சட்டம் வகுத்துள்ள மதச்சார்பற்ற அரசு கோட்பாட்டை அகற்றி மக்கள் ஒற்றுமையை சிதைப்பதை நோக்கமாகக் கொண்ட உ.பி முதல்வரின் இந்தப் பேச்சை கண்டிக்க முன்வரவேண்டும் என்று  அனைத்து மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: