உயர் ரத்த அழுத்தத்திற்கான புதிய அளவுகோலை அமெரிக்க இருதயக் கழகம் 13-11-2017 அன்று அறிவித்திருக்கிறது. இனிமேல் ரத்த அழுத்தத்தின் அளவு முன்னைப் போல 140/90 என்பதாக இல்லாமல், 130/80 என்றிருக்கும் போதே உயர் ரத்த அழுத்தம் இருப்பதாகக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். கடந்த 2003ஆம் ஆண்டிற்குப் பிறகு. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய அளவுகோலின்படி, இந்த அளவிலான குறைவான ரத்த அழுத்த அளவிலேயே உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. ”இந்த புதிய அளவுகோல் அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்தக் குறைவான அளவிற்கு மேல் ரத்த அழுத்தம் இருந்தாலே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது அல்ல. இது சிவப்பு விளக்குக்கு முன்பாக ஒளிரும் மஞ்சள் விளக்கைப் போல, ஒருவர் தனது ரத்த அழுத்தம் குறித்து அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவே இருக்கும்” என்று இந்த வழிகாட்டுதல்கள் வெளியாகி இருக்கும் அமெரிக்க இருதயக் கழக ஆய்விதழின் ஆசிரியரான பால் வெல்ட்டன்  சொல்கிறார்.

இதற்கு முந்தைய அளவுகோலின்படி 32 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களாக இருந்தார்கள் என்ற நிலையில், இந்த புதிய அளவுகோலின்படி அமெரிக்க மக்கள்தொகையில் ஏறக்குறைய 46 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு முன்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்த இந்த உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை, இப்போது நாற்பதுகளில் இருப்பவர்களையும் தொட்டு விடும் சாத்தியம் கொண்டாதாக மாறி இருக்கிறது.

நாடு தழுவிய அளவில் 9000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், ரத்த அழுத்தம் 130/80 என்ற அளவை எட்டும் போதே ரத்த நாளங்கள் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இனிமேல் 120 – 139 வரை ரத்த அழுத்தம் இருப்பவர்களே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களாக பிரித்து வைக்கப்பட்டிருந்த நிலைமை மாறி, இனிமேல் 120 – 129, 80க்கு கீழே என்று ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கூடுதல் ரத்த அழுத்தம், 130 – 139, 80 – 89 ரத்த அழுத்தம் கொண்டவர்கள் உயர் ரத்த அழுத்தம் (நிலை I) உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள். மருத்துவ சிகிச்சை என்பது இந்த உயர் ரத்த அழுத்தம் (நிலை I) உள்ளவர்களுக்கே தேவைப்படும் என்று அந்தப் புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தைச் சரியான உபகரணங்கள் கொண்டு அளக்க வேண்டும், இரண்டு அல்லது மூன்று முறை அளவீடு செய்து அதன் சராசரி அளவைக் கணக்கில் கொள்ள வேண்டும். வெவ்வேறு தருணங்களில் ரத்த அழுத்தத்தை அளக்க வேண்டும் என்பது போன்ற வழிமுறைகளும் கூறப்பட்டிருக்கின்றன.

”இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டியது. இதன் மூலம் மருந்துகள் அதிகம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்றில்லாமல், வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வதற்கு இது உறுதுணையாக இருக்கும்” என்று நியூயார்க்கில் உள்ள லெனோக்ஸ் ஹில் மருத்துவமனையில் இருதயவியலாளாராகப் பணிபுரியும் சத்ஜித் புஸ்ரி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய அளவுகோல்களைக் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகள் கலிபோர்னியாவில் அண்மையில் நடைபெற்ற அமெரிக்க இருதயக் கழக மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

http://www.telegraph.co.uk/health-fitness/body/high-blood-pressure-redefined-us-130-not-140-meaning-nearly/

-தமிழில்: முனைவர்: தா சந்திரகுரு
விருதுநகர்

Leave A Reply

%d bloggers like this: