திருப்பூர், நவ.14 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அருந்ததியர் மக்கள் வீடுகளின் மீது உரசி ஆபத்தான நிலையில் இருக்கும் மின் கம்பிகளை மாற்றித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனு விபரம் வருமாறு:- ஆதித்தமிழர் பேரவை சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பது: திருப்பூர், பல்லடம் அடுத்த குள்ளானம்பதி அருந்ததியினர் வசித்து வரும் பகுதியில் மின்கம்பி வீட்டின் மீது உரசுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. 10 வீடுகளில் மின் கம்பிகள் உரசுவதாக பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை, காற்று காரணமாக சன்னல் கதவுகளில் மின் கம்பிகள் உரசுகிறது. இதனால், மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. எனவே, உடனடியாக மின் கம்பங்களை அகற்றி, மாற்றி அமைத்து தர கோரினர்.

கந்துவட்டி கொடுமை:
அவிநாசியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சதிஷ்குமார் (38) அளித்த மனுவில், அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியரிடம் ரூ.30 ஆயிரம் கந்துவட்டிக்கு பணம் பெற்றதற்கு வார வட்டியாக ரூ. 1500 செலுத்தி வந்தேன். நான்கு மாதங்களில் 24 ஆயிரம் கட்டிய பின் பணம் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் ரூ.72 ஆயிரம் கட்டுமாறு சொன்னார்கள். அந்த தொகையை செலுத்திய பிறகும், பணம் வாங்கியபோது எழுதப்பட்ட ஒப்பந்தம், காசோலை ஆகியவற்றைத் தர மறுத்தனர். மொத்தம் ரூ.ஒன்றரை லட்சம்கட்டியும் தனக்கு சேர வேண்டிய ஆவணங்கள் எதையும் அவர்கள் தரவில்லை. இது தொடர்பாக காவல்நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கந்துவட்டி கொள்ளையில் ஈடுபட்டநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், ஆவணங்களையும் மீட்டுத்தர வேண்டும் என்றார். அதேபோல் காஞ்சனா என்பவரும் அதே கந்துவட்டி தம்பதியரிடம் பணம்பெற்று பாதிக்கப்பட்டுள்ளதாக, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளித்தார்.

Leave A Reply