செல்லா நோட்டு அறிவிப்பு வெளியாகி ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. டிஜிட்டல் இந்தியா உருவாகிவிட்டதா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறதா என்ற கேள்விகளுக்கு முன்பை விட அதிகரித்திருக்கிறது, வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும் என்பதுபோன்ற பதில்கள்தான் கிடைக்கின்றன. செல்லா நோட்டு அறிவிப்பிற்குப் பிறகு ஏற்பட்ட பணத் தட்டுப்பாட்டால் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்தது. 2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதிகரித்திருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை சதவீதம் அதன்பிறகான காலங்களில் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை. இருப்பினும் சிறு அளவிலான செலவினங்களான மொபைல் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ், சினிமா டிக்கெட், பஸ், ரயில், விமான டிக்கெட் புக்கிங், டாக்சி புக்கிங், கேஸ் புக்கிங், மின் கட்டணம் செலுத்துதல், கடைகளில் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றில் மொபைல் வாலட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஒரு அங்கமாக இருக்கும் மொபைல் வழிப் பணப்பரிவர்த்தனை சேவையான மொபைல் வாலட் சேவைப் பிரிவு அதிகமான போட்டிகள் கொண்டதாக தற்போது மாறிவருகிறது. 2022ஆம் ஆண்டில் மொபைல் வாலட் பரிவர்த்தனை 32 லட்சம் கோடியைத் தொடும் என டெலோடீ என்ற சந்தை ஆலோசனை நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அதற்கேற்ப பல நிறுவனங்களும் மொபைல் வாலட் சேவையில் கால் பதித்து வருகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலையில் 30க்கும் மேற்பட்ட வாலட்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலான வங்கிகள் வாலட் சேவையையும் சேர்த்தே வழங்குகின்றன. வங்கித் துறை சாராத வர்த்தக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பலவும் இச்சேவையில் ஈடுபட்டுள்ளன.

மொபைல் வாலட்களில் இரு வகை பரிமாற்றங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒன்று பணத்தை கிரெடிட் கார்டு/ஏடிஎம் கார்டு/டெபிட் கார்டு/நெட்பேங்கிங் உள்ளிட்ட ஏதேனும் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி தேவையான பணத்தை வாலட்டிற்கு மாற்றி சேமித்து வைத்து செலவழிப்பது. மற்றொன்று வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக யுபிஐ (UPI) வசதியைப் பயன்படுத்தி பணத்தை எடுத்து பரிமாற்றம் செய்வது.

யுபிஐ பணப்பரிமாற்ற சேவை
இந்திய அரசின் நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payment Corporation of India – NPCI) உருவாக்கிய ‘யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸ்’ (UPI) பல வாலட்களில் எளிமையான பணப்பரிமாற்றத்திற்கு உதவியாக இருக்கிறது. இணையத் தொடர்பு இல்லாத போன்களில் கூட *99# என்ற எண்ணை அழைப்பதன் மூலம் இச்சேவையைப் பெறலாம்.இச்சேவை மூலமாக வங்கியுடன் இணைக்கப்பட்ட ஒரு மொபைல் எண்ணிலிருந்து அதே போன்று வங்கியுடன் இணைக்கப்பட்ட மற்றொரு மொபைல் எண்ணுக்கு எளிதாக பணத்தை அனுப்பமுடியும். இச்சேவையைப் பெற வங்கிக் கணக்கு உள்ள ஒவ்வொருவரும் தமக்கான பிரத்யேக 6 இலக்க யுபிஐ பின் எண்ணை உருவாக்கியிருக்கவேண்டும்.
கியூஆர் கோட் அல்லது யுபிஐ ஐடி-யைப் பயன்படுத்தி மற்றொருவரிடமிருந்து பணத்தைப் பெறவும் அனுப்பவும் முடியும். வங்கிக் கணக்கு எண், IFSC குறியீடு, டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு விபரங்கள் தரவேண்டும் என்ற அவசியம் இதில் இல்லை என்பது இதன் சிறப்பம்சமாகும்.

பணம் அனுப்பவேண்டியவரின் மொபைல் எண் இணைக்கப்படவில்லையென்றாலோ தெரியவில்லையென்றாலோ வங்கிக் கணக்கு எண் விபரங்களைக் கொடுத்தும் பணம் அனுப்பலாம்.

யுபிஐ சேவையை அனைத்து வங்கிகளும் பயன்படுத்தும் வகையில் செயலிகளை உருவாக்கி பயனாளர்களுக்கு வழங்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டது. அதன்படி அனைத்து வங்கிகளும் இச்சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பெரும்பாலான வங்கிகள் யுபிஐ வசதியுடன் பிரத்யேக வாலட் செயலிகளையும் வழங்கியுள்ளன. இச்செயலிகளைப் பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம்.

வாலட் சேவையில் முக்கிய நிறுவனங்கள்
நிதியமைச்சகம் வெளியிட்ட பீம் (BHIM App) செயலி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் எஸ்பிஐ பட்டி (SBI Buddy) செயலி, ஆன்லைன் வர்த்தகத் தளமான அமேசானின் அமேசான் பே, கூகுளின் தேஜ், தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் ஏர்டெல் பேமண்ட் பேங்க், வோடாபோனின் எம்-பேசா, ஜியோ மணி, பிரத்யேக வாலட் மற்றும் ஆன்லைன் வர்த்தக சேவைகளை வழங்கும் பேடிஎம், ஃபிரீசார்ஜ், மொபிகுவிக், பேபால் என 30க்கும் மேலான வாலட்கள் பயன்பாட்டில் உள்ளன.

மொபைல் வாலட் பாதுகாப்பானதா?
இச்சேவையில் மொபைல் எண்ணே முக்கியமானது என்பதால், உங்களுடைய போன் தொலைந்துபோக நேர்ந்தால் அதிலுள்ள கணக்கு விபரங்களை, எடுத்தவர்கள் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது.

பாதுகாப்பு வழிகள்
உங்களுடைய போன் தொலைந்துபோக நேர்ந்தால் உடனடியாக மொபைல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு எண்ணை செயலிழக்கச் செய்யவேண்டும். அத்துடன் புதிய சிம் மற்றும் மொபைலை வாங்கவேண்டும். போனில் வங்கிக் கணக்கு எண், வாலட் விவரங்கள், பாஸ்வேர்டுகளை பதிவு செய்து வைக்காதீர்கள். ஹேக்கர்கள் உங்களின் வாலட் ஆப்ஸ் மட்டுமின்றி எஸ்எம்எஸ்களை கூட திருடலாம். எனவே, உங்கள் சுயவிவரங்களை படிக்க அனுமதி கோரும் ஆப்ஸ்களை பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.

அங்கீகரிக்கப்பட்ட வாலட் ஆப்களையே பயன்படுத்தவும். இலவசமாகக் கிடைக்கிறது, சலுகை கிடைக்கிறது என்றெண்ணி மூன்றாம் நபர் இணையதளங்களில் கிடைக்கும் வாலட்களை மொபைலில் நிறுவாதீர்கள்.

கூகுள் பிளேயால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டும் நிறுவவும்.
தகுந்த அங்கீகரிக்கப்பட்ட ஆப் மூலம் இவற்றை லாக் செய்து பாதுகாக்கவும்.
வாலட்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டாம். பரிவர்த்தனை முடிந்தவுடன் லாக் அவுட் செய்து வெளியேறிவிடவும்.

வாலட் பயன்படுத்த கட்டணம் விதிக்கப்படுமா?
தற்போது சிறு அளவிலான பரிமாற்றங்களுக்கு சேவை வரி மற்றும் சேவைக் கட்டணம் இல்லாமல் இருக்கிறது. இதன் காரணமாகவும், இணைய வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற சேவைகளைவிட மொபைல் வாலட் முறை ஓரளவிற்கு பாதுகாப்பானதாகவும், பயன்படுத்த எளிதாக இருப்பதாலும் இளைய தலைமுறையினரிடம் இச்சேவை வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது தற்காலிகமானதுதான். தற்போது ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்போது சேவைக் கட்டணத்தை ஒரு சில வங்கிகள் கோருகின்றன. சிறு அளவுப் பரிமாற்றங்களான மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன் கட்டண சேவைகளை வழங்குவதன் வாலட் நிறுவனங்களுக்கு லாபம் கிடைப்பதால் அவற்றிற்கு சேவைக்கட்டணத்தை பெரும்பாலான நிறுவனங்கள் கேட்கவில்லை. இருப்பினும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்று கூறி பிறகு குறைந்த பட்ச இருப்பு, பரிமாற்றக் கட்டணம், பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் சேவைக் கட்டணம் என்று வங்கிகள் செய்த அதே வேலையை வாலட் பயன்பாடு அதிகரிக்கும்போது, வாலட் நிறுவனங்களும் சேவைக் கட்டணம், சேவை வரி என்று வசூலிக்கத் தொடங்கும். அப்போது வாலட்களைப் பயன்படுத்துவோர் நிலை என்னவாகும் என்பது கவலைக்குரியது.

Leave A Reply

%d bloggers like this: