தேனி;
முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் கண்காணிப்பு குழுவினர் செய்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த 2014 மே 7 -ல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டு , அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தற்போது மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரான குல்சன்ராஜ் இக்குழுவின் புதிய தலைவராக உள்ளார்.

இந்த குழுவில் தமிழக அரசுப் பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், பருவ மழைக்காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அணை பாதுகாப்பு குறித்தும் அணையின் உறுதித்தன்மை குறித்தும் இக்குழுவினர் செவ்வாயன்று முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். முன்னதாக மெயின் அணை, பேபி டேம், கேலரிப்பகுதி, மதகுப்பகுதிகளையும், அணையின் கசிவு நீர் அளவு ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். ஆலோசனைக் கூட்டம்
மாலையில் குழுவின் ஆலோசனைக்கூட்டம் குமுளியிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது.ஆய்வின்போது, துணைக்குழு தலைவர் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ், தமிழக பிரதிநிகள் செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள அரசு பிரதிநிதிகள் கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவி பொறியாளர் பிரசீத் உள்ளிட்ட தமிழக கேரள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: