சென்னை;
சென்னை  நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த தவறான செய்திக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை கடந்த மார்ச் 31-ஆம் தேதிக்குள் மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகத்தில் 2,800 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், சண்டிகர் அரசு தனது எல்லைக்குள் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றி, மதுக்கடைகளைத் திறந்தது.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றியது சரியானதுதான் என தெரிவித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றாவிட்டாலும் மதுக்கடைகளை திறக்கலாம் எனவும் குறிப்பிட்டது.

இதனிடையே, சண்டிகர் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தமிழகத்திற்கு பொருந்துமா? என்று கேட்டு, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தை முறையிட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞரும் – முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான முகுல் ரோத்கி ஆஜராகி, “சண்டீகரில் நகராட்சிப் பகுதிகளில் மட்டும்தான் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு விளக்கம் தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “இவ்விஷயத்தில் உயர் நீதிமன்றம் ஏன் கவலைப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியதுடன், “எங்களது உத்தரவு சண்டீகரின் நகராட்சிப் பகுதிக்குப் பொருந்தும் என்றால், அது நாட்டின் ஏனையப் பகுதிகளுக்கும் பொருந்தும் என்றுதான் அர்த்தம்” என்று குறிப்பிட்டார்.

“உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் இடம் பெற்றுள்ள ‘பிற நகராட்சிப் பகுதிகள்’ என்ற சொற்றொடருக்கான விளக்கம், நாட்டிலுள்ள பிற நகராட்சிப் பகுதிகள் என்பதுதான்” என்று நீதிபதி டி.ஓய். சந்திரசூட் தெரிவித்தார்.இதனிடையே மதுபானக் கடைகளைப் திறப்பதற்கு எதிராக, வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “நகராட்சிப் பகுதி நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான தகவலைத் தெரிவித்துள்ளது” என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். மேலும், “உச்ச நீதிமன்ற உத்தரவில் விளக்கம் கேட்டு தமிழக அரசு மனு தாக்கல் செய்து விட்டு, அதில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விளக்கம் தேவைப்படுகிறது என்று கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்” என்றும் கண்டனம் தெரிவித்தார்.

Leave A Reply