புதுதில்லி;
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெயரை சொல்லி லஞ்சம் பெற்ற வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
லக்னோவிலுள்ள மருத்துவ கல்லூரியை, அரசு கறுப்பு பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்ற நோக்கத்தில் நீதிபதிகளுக்கு லஞ்சம் கொடுக்க கல்லூரி நிர்வாகம் முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனும் இவ்வழக்கில் ஒரு மனுதாரராக இணைந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, லக்னோவில் செயல்பட்டு வந்த ஒரு மருத்துவக்கல்லூரி தொடர்பான வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குட்டூசி, லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதை வழக்கறிஞர்கள் சுட்டிக் காட்டினர். இதனடிப்படையில், நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்படுவது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இவ்வழக்கு கடந்த நவம்பர் 9-ஆம் தேதி நீதிபதிகள் செலமேஸ்வர் மற்றும் அப்துல் நசீர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 5 மூத்த நீதிபதிகளை அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

ஆனால் நவம்பர் 10-ஆம் தேதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதில் தலையிட்டு, எந்த நீதிபதியும் தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தை கையில் எடுக்க முடியாது. தலைமை நீதிபதிதான் நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர் என்று கூறி விட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் ஆர்.கே. அகர்வால், அருண் மிஸ்ரா மற்றும் கன்வில்கர் ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, அனைவரும் உச்சநீதிமன்ற மாண்பு மீது சந்தேகம் கிளப்புகின்றனர்; உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழக்கூடாது; ஏனெனில் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரை குறிப்பிடவேயில்லை; எனவே தலைமை நீதிபதிக்கு எதிராக தேவையற்ற கருத்துக்களை கூறக் கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இன்று தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, இந்த மனு தலைமை நீதிபதிக்கு எதிரானது என்ற தப்பான பிம்பம் ஏற்பட்டுள்ளது என்று பிரசாந்த் பூஷன் விளக்கம் அளித்தார். நீதிபதிகள் பெயரால் லஞ்சம் பெறப்படுவது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் கோரிக்கை விடுத்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், சிறப்பு புலனாய்வு குழு மூலம் இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது கூறிவிட்டனர். மேலும், நீதிபதிகள் உட்பட யாருமே சட்டத்திற்கு மேற்பட்டவர்கள் கிடையாது என்றாலும், நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிபதி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: