நாகப்பட்டினம்;
நாகையை அடுத்துள்ள வடகுடிச்சத்திரம் என்னும் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு, தொழிற்சாலை முழுவதும் வெடித்துச் சிதறித் தரைமட்டமாகியது. இந்த வெடி விபத்தானது, 3 கிலோமீட்டர் சுற்றளவு தூரத்திற்கு பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் அதிர்வைத் தந்தது. இதில் ஒரு பெண் பலியானார்.

வடகுடிச்சத்திரம் என்னும் இடத்தில், வீரப்பன் மனைவி சவுந்தரவள்ளி(59) என்பவர், நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். நாட்டு ஓடு போடப்பட்ட ஒரு கட்டடத்தில் பலவிதப் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வந்தது. இங்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வந்தனர். ஆலையில் இரவுநேரத்தில் காவலுக்காக, நரியங்குடி
கிராமத்தைச் சேர்ந்த முருகையன் மனைவி நாகம்மாள் (55) என்பவர் தங்கியிருந்தார்.அதிகாலையில் திடீரென்று ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுக் கட்டடம் எரிந்து தரை மட்டமாகியது. இதில் நாகம்மாள் எரிந்து பலியானார். சம்பவ இடத்திற்கு நாகப்பட்டினம் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, போராடி தீயை அணைத்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் மற்றும் நாகை, நாகூர் காவல் ஆய்வாளர்கள், வருவாய் அதிகாரிகள் தலத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்த நாகம்மாளின் உடல் மருத்துவ மனைக்குக் கூராய்விற்கு அனுப்பப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பும் இந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டுச் சிதறியது. சில மாதங்களுக்கு லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் லைசன்ஸ் பெற்று, அதே இடத்திலேயே இந்த ஆலை நடத்தப்பட்டு, தற்போது, இரண்டாம் முறையாக விபத்து நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.