இந்திய மருத்துவர் சங்கம், நம்ம கடலூர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ரோட்டரி, லயன்ஸ் கிளப், உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழா கடலூர் டவுன் ஹாலில் நவம்பர் 10 ஆம் தேதி துவங்கியது.
இந்த புத்தகத் திருவிழா அமைப்புக்குழுவின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறார் எழுத்தாளர் விருது தேர்வு செய்யப்பட்டது. இவ்விருதினை குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று  தேசிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன் தலைமையில் சாகித்ய அகாதமி விருது பெற்ற புகழ்வாய்ந்த எழுத்தாளர் சா.கந்தசாமி வழங்கினார்.

பேராசிரியர். மோகனா
பேராசிரியர் மோகனா, 38 ஆண்டுகள் விலங்கியல் பேராசிரியராக, கல்லூரி விலங்கியல் துறைத் தலைவராக, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வறியாமல் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் பல ஆண்டுகாலமாகப் பணியாற்றி வரும் பேராசிரியர். கடந்த நான்காண்டு காலமாக அதன் மாநிலத் தலைவர். அறிவியல், பாலியல் சமத்துவம், நிலைப்புறு மேம்பாடு போன்ற அதன் பல்வேறு செயல்பாடுகளை முன்னின்று நடத்தி வருபவர்.

அறிவியல் இயக்கத்தின் துளிர் இதழின் ஆசிரியர் குழுவில் 33 ஆண்டுகாலம் பங்காற்றியுள்ள பேராசிரியர்.மோகனா, அறிவியல் இயக்கம் வெளியிடும் அறிவுத்தென்றல் இதழின் ஆசிரியர். விழுது கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். ஆண்டு தோறும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறையின் கீழ் நடக்கும் தேசிய சிறார் அறிவியல் திருவிழாவில் பல பொறுப்புகளில் இருந்து பணியாற்றி வருபவர். எளியமுறையில் அறிவியலை பரந்து பட்ட மக்களிடம் கொண்டு செல்ல 40 க்கும் மேற்பட்ட நூல்களும் 4000 க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

சுஜாதா
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் சிறார் இதழின் ஆசியர் குழு உறுப்பினராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்த தில் சுஜாதாவின் எழுத்துப்பணி துவங்கியது. பின்னர், கோகுலம் சிறார் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து, பொறுப்பாசிரியராக 12 ஆண்டுகள்  வரை  பணியாற்றினார். பிறகு, கிழக்கு பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான ப்ராடிஜி பதிப்பில்  ஆசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார்.

பதிப்பாசிரியராக, வரலாறு, இலக்கியம், அறிவியல் என்று சுமார் 250 புத்தகங்களுக்கு பணியாற்றியுள்ளார். அத்தோடு மேதை என்ற மாத இதழுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். பின் ‘தி இந்து தமிழ்’ நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகள் முதன்மை உதவியாசிரியராகவும், குழந்தைகளுக்கான மாயாபஜார் இணைப்பிதழில் 6 மாதங்களாகவும் பணியாற்றி வருகின்றார்.
உலக அதிசயங்கள், விலங்குகள், யானை, எறும்பு, மீன்,   விலங்குகள் போன்ற குழந்தைகளுக்கான புத்தகங்களும் தமிழக சுற்றுலா என்ற புத்தகமும் அப்துல்கலாம் வாழ்க்கை படக்கதைப் புத்தகமும் இதுவரை வெளிவந்துள்ளன. பெண் மனம் என்ற பெயரில் 6 மாதங்கள் கிழக்கின் ‘தமிழ்பேப்பர்’ இணையதளத்தில் பெண்கள் தொடர்பான கட்டுரைகள் எழுதியுள்ள சுஜாதா, தி இந்து தமிழ் நாளிதழிலும் கட்டுரைகள் எழுதி வருகின்றார். சுஜாதாவின் தந்தை சுத்தானந்தம், கணவர் வள்ளிதாசன் ஆகியோரும் எழுதக் கூடியவர்கள்.

லதானந்த்
டி.ரத்தினசாமி என்ற இயற்பெயர்கொண்ட லதானந்த் எழுத்தோ டும் பத்திரிகைப் பதிப்போடும் தொடர்புடைய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை திருஞானசம்பந்தம். கோவையிலிருந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக வந்த ‘வசந்தம்’ இதழின் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர். புகழ்பெற்ற கொங்கு மண்டல நாவல் ஆசிரியர் ஆர்.சண்முகசுந்தரம் இவரது பெரியப்பா. இலக்கியத்தில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ள லதானந்த், வனத்துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ஓய்விற்குப் பின் ஓராண்டு ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பின், கடந்த மூன்றாண்டு காலமாக கோகுலம் இதழின் பொறுப்பாசிரியாரகப் பணியாற்றி வருகின்றார். பல்வேறு பத்திரி கைகளில் நூற்றுக் கணக்கான சிறுகதைகள் கட்டுரைகள் எழுதியுள் ளார். மெமரி பூஸ்டர், பிருந்தாவன் முதல் பிரயாகை வகை உள்ளிட்ட பல நூல்களும் எழுதியுள்ளார். சுட்டி விகடனில் தொட ராக வந்த ‘வனங்களில் வினோதங்கள்’ வனங்கள் குறித்து சிறாருக்கு அறிமுகம் செய்யும் முக்கியமான கட்டுரைத் தொகுப்பு ஆகும்.

யூமா வாசுகி
தி.மாரிமுத்து என்ற இயற்பெயர் கொண்ட யூமா வாசுகி, தமிழின் முக்கியமான இலக்கிய கர்த்தாக்களில் ஒருவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். 49 சிறார் நூல்கள் உள்ளிட்டு 85 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து அரும்பணியாற்றியுள்ளார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் பதிப்பாசிரியராக பதினைந்து நூல்களின் மறுபதிப்பிலும் பணியாற்றியுள்ளார். துளிர், கணையாழி, தினமணி சிறுவர் மலர், உங்கள் நூலகம், புத்தகம் பேசுது ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.

குதிரை வீரன் பயணம் எனும் இலக்கியச் சிற்றிதழின் ஆசிரியராக வெளியீட்டாளராக இருந்து வருகின்றார். சிறந்த ஓவியர், ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார்.பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தியுள்ளார். இலக்கியச் சிந்தனை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், தமிழ் வளர்ச்சித்துறை, திருப்பூர் தமிழ்ச் சங்கம், நெய்வேலி புத்தகக் காட்சி, ஆனந்தவிகடன், களம் புதிது, இலக்கிய வீதி, நல்லி திசையெட்டும், திருச்சி எஸ்.ஆர்.வி, களம் புதிது என பல நிறுவனங்களும் அமைப்புகளும் விருதளித்து மகிழ்ந்து கொண்டாடிய எழுத்தாளர் யூமா வாசுகி.

சுட்டி கணேசன்
பாலாஜி என்று நண்பர்களால் அழைக்கப்படும் சுட்டி கணேசன் சுமார் 40 ஆண்டுகாலமாக சிறார் இலக்கியத்திலும் சிறார் இதழ்களி லும் பணியாற்றி வருபவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் சிறார் இதழில் தனது இதழியல் பணியைத் துவக்கிய கணேசன் தற்போது சுட்டி விகடனின் பொறுப்பாசிரியர். ஸ்நேகா பதிப்பகத் தின் பதிப்பாசிரியராக 150க்கும் மேலான நூல்களை பதிப்பிக்கும் பணியும் ஆற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வித் திட்டத் தின் வளரறி முறைக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதியை கடந்த 6 ஆண்டுகளாக வெளியிட்டு வருவது மற்றுமொரு சிறப்பு. சூப்பர் சுடோகு, காப்பி அடிக்கலாம் வாங்க என்ற இரு நூல்களையும் எழுதியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: