சென்னை;
சசிகலா சகோதரர் திவாகரன், அவரது மருமகன் விவேக், மருமகள் கிருஷ்ண பிரியா ஆகியோரை நேரில் ஆஜராகச் சொல்லி, வருமான வரித்துறையினர் தனித் தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான ஜெயா டிவி, நமது எம்ஜிஆர், மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட், ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும், அவர்களின் உதவியாளர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள், ஜோதிடர்கள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களிலுமாக மொத்தம் 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

20 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன், 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த மெகா ரெய்டின் முடிவில், மொத்தம் ரூ. 1400 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத சொத்து, நிறுவனங்கள், ரொக்கம், தங்கம் உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.317 வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், 350 நபர்கள், 215 சொத்துக்கள், 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தங்களின் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்த வருமான வரித்துறையினர், 200-க்கும் மேற்பட்டோரை சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்தனர்.
முதற்கட்டமாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார் ஆகியோரிடம் திங்களன்று விசாரணை நடத்திய அதிகாரிகள், அன்று மாலை ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

நீண்ட விசாரணைக்கு பின்னர் அவரை விடுவித்தனர். செவ்வாயன்று ஜாஸ் சினிமாஸின் மூன்று முக்கிய நிர்வாகிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த பதிலை வீடியோவாக பதிவு செய்து கொண்டதுடன், எழுப்பூர்வமாகவும் வாக்குமூலம் பெற்றனர்.இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆகியோருக்கும் வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். விவேக் ஜெயராமனுக்கும் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

திவாகரன் திருச்சியிலும், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோர் சென்னையிலும் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: