திருப்பூர், நவ.14-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2015 மே மாதம் முதல் 2017 அக்டோபர் மாதம் முடிய ஒன்றரை ஆண்டில் மொத்தம் 177 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சமூகநல அலுவலர் பூங்கொடி தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தையொட்டி குழந்தைகள் நலன், பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைல்டு லைன் நண்பர்கள் விழிப்புணர்வு வாரம் நவ.13ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் தொடக்கமாக திங்களன்று சைல்டு லைன் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சமூகநல அலுவலர் பூங்கொடி கூறுகையில், சிறார் பாதுகாப்புச் சட்டப் பிரிவின் கீழ்
குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலில் குழந்தைகளைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சைல்டு லைன் அல்லது ஆட்சியர், குழந்தை பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பிற தொடர்புகள் மூலமோ 18 வயதுக்குக் குறைவான குழந்தை திருமணங்கள் குறித்து தகவல் வருகிறது. பெரும்பாலும் திருமணத்திற்கு குறிக்கப்பட்ட நேரத்தில், கடைசி தருணத்தில் தகவல் கிடைக்கும்போது உடனடியாக அங்கு சென்று இத்திருமணங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்கிறோம்.

குழந்தை திருமணத்தில் சாதி, கலாச்சாரம், சொத்து, காதல் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான உணர்வு சார்ந்த விசயங்கள் உள்ளன. இத்திருமணங்களைத் தடுத்து அவர்களது எதிர்கால நலனை உணர்த்துவதில் கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைகள் வழிதவறிப் போகாமல் தடுப்பதில் பெற்றோருக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. பெற்றோர் குறைந்தபட்ச நேரம் ஒதுக்கி குழந்தைகளுடன் பேச வேண்டும் என்றார். இந்நிகழ்வில் சைல்டு லைனின் கூட்டு நிறுவனமாகச் செயல்படும் சிஎஸ்இடி இயக்குநர் நம்பி பேசுகையில்,சைல்டு லைன் 1098 என்ற தொடர்பு எண் குறித்து பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோர் குழந்தைகள் என ஐ.நா. வரையறுத்தாலும், இந்தியாவில் இதில் தெளிவான வரையறை இல்லை. 14 வயதுக்கு மேற்பட்டோரை உறவினர் என சொல்லி உணவகங்கள், பேக்கரிகளில் வேலை வாங்கும் நடைமுறை உள்ளது.

ஜவுளி நூற்பாலைகளில் விடுதிகளில் தங்கவைத்து வேலை வாங்கப்படுவதில் பெரும்பாலும் 15 வயது முதல் உள்ள 90 சதவிகிதம் பெண் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திருப்பூர் மாவட்டத்தில் 154 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் இதில் பெரும் முன்னேற்றம் தேவைப்படுகிறது. உடல்ரீதியாக வதைக்கப்பட்ட 158 பேர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 20 குழந்தைகள், பிச்சையெடுக்க விடப்பட்ட 131 குழந்தைகள் சைல்டு லைன் மூலம் மீட்கப்பட்டனர்.  இந்த காலத்தில் மொத்தம் 2122 அழைப்புகள் சைல்டு லைனுக்கு வந்தன. இதில் 1307 அழைப்புகளுக்கு தலையீடு தேவைப்பட்டதால் அரசு, குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த அமைப்புகள் மூலம் தலையீடு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குழந்தைகள் நலக்குழு தலைவர் பேசுகையில், குழந்தைகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக 60 சதவிகிதம் சைல்டு லைன் மூலமும், 30 சதவிகிதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமும், 10 சதவிகிதம் காவல் துறையினர் உள்ளிட்ட பிறர் மூலம் தகவல் பெறப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டில் மொத்தம் 37 காப்பகங்கள் செயல்பட்டன. தீவிர கண்காணிப்பு, முறைப்படுத்துதல் காரணமாக தற்போது 19 விடுதிகள் உள்ளன. நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலை கூடாது. நம் குழந்தைகள் சமூகத்தில் வளரும்போது பிறருடன் பழக வேண்டிய நிலையில், மற்ற குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தால்தான் நம் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும். திருப்பூரைப் பொறுத்தவரை கணவரால் கைவிடப்பட்ட, தனித்து வாழும் பெண்கள் அதிகம் உள்ளனர். குழந்தைகளை விட்டுவிட்டுப் போகும் பெற்றோர் உள்ளனர். 18 வயது வரை குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது என உணர வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு விசயத்தில் 12 சார்பு அரசுத் துறைகள் செயல்படுகின்றன என்றார். முன்னதாக சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் அறிமுகப்படுத்துகையில், திருப்பூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இதில் சுமார் 50 சதவிகிதம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். தொழில் வளர்ச்சி காரணமாக பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து வேலைக்காக இங்கு வருகின்றனர்.

எனினும் இங்கு மாவட்ட மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, இஎஸ்ஐ மருத்துவமனை, சாலை வசதி, குழந்தைகள், இடம் பெயர்ந்து வருவோர் பாதுகாப்புக்கு உரிய விசயங்கள் இல்லை. சைல்டு லைனுக்கு அழைப்புகள் வருவதில் திருப்பூர் மாவட்டம் மாநிலத்தில் நான்காம் இடத்தில் இருக்கிறது. ஒருபுறம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாக எடுத்துக் கொண்டாலும், இங்கு குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகளும் அதிகம் உள்ளது. பள்ளிகளில் குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று சட்டம் இருப்பதை ஆசிரியர்கள் அறிந்திருந்தாலும் மனரீதியாக இன்னும் மாறவில்லை. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு வித வன்முறைகளையும் தடுக்க வேண்டியுள்ளது. என்றார்.மரியாலயா இயக்குநர் விக்டோரியா, உள்பட சைல்டு லைன், குழந்தைகள் நலக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: