தாராபுரம், நவ. 14 –
தாராபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மாணவர் ஒருவர் பலியாகியிருக்கும் நிலையில், டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்ட அவரது அண்ணன் தீவிர சிகிச்சைக்காக கோவை மருத்துவ பல்கலை கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாராபுரம் நேரு நகரை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி செல்லப்பாண்டின் (48), வளர்மதி தம்பதியினர். இவர்களது மகன்கள் கார்த்திகேயன் 9 ஆம் வகுப்பும், விஜய்
பிரவீண் 8 ஆம் வகுப்பும், சந்தோஷ் 2 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேரு நகர் பகுதியில் டெங்கு காய்ச்சல்பரவி உள்ள நிலையில் இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சந்தோஷ் மற்றும் கார்த்திகேயன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று அதிகாலை உயிரிழந்தார். கார்த்திகேயன் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதே பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் பல குழந்தைகளும், பெரியவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை ஓய்ந்த நிலையில் டெங்குவின் தாக்கம் தாராபுரத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே அரசு நிர்வாகம் உடனடியாக தாராபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் டெங்குபரவாமல் தடுக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply