கோவை, நவ. 14-
தனியார் பள்ளியில் சக மாணவிகளிடம் தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 9ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மகாலட்சுமி செட்டிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பள்ளியில் கழிவுநீரையும், கற்களையும் அவ்வப்போது நாங்களே ( மாணவ, மாணவிகள் ) அகற்றி வருகிறோம். மேலும் பள்ளியில் சிறு குழந்தைகளுடன் தமிழில் பேசினால் கூட அபராதம் விதிக்கப்படுகின்றது. கடந்த வாரம் தமிழில் பேசியதற்காக எனக்கு அபராதம் விதித்ததால், பேருந்தில் செல்ல முடியாமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது குறித்து எங்கள் பெற்றோரிடம் தெரிவித்து பள்ளிக்கு அழைத்து சென்றால், பெற்றோர்களை அவமரியாதையாக பேசுவதோடு, மிரட்டவும் செய்கின்றனர். எங்கள் பள்ளியின் விளையாட்டு துறைஆசிரியர் கார்த்திக் என்பவர் மாணவிகளிடம் அத்துமீறி நடத்து வருகிறார். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளை பாதுகாத்திட வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். மாணவி மகாலட்சுமியுடன் அவரது தந்தை மாரிமுத்து மற்றும் சமூக ஆர்வலர் மரீனா ஆகியோர் ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Leave A Reply

%d bloggers like this: