மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளருமான கே.சாமுவேல்ராஜுக்கு சாதி ஆதிக்க சக்திகள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றன.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். கரூர் காந்தி கிராமத்தில் வசிக்கும் பழனிச்சாமி மகன் வேல்முருகனுக்கும், கரூர் வென்னைமலை நாவல் நகரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகள் நிவேதாவிற்கும் உறவினர்கள் நிச்சயித்தபடி வென்னைமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவுண்டர் சமூகத்தை சேர்ந்த சில சாதி ஆதிக்க உணர்வாளர்கள் மணமக்களின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இந்த சாதிமறுப்பு திருமணத்திற்கு பாதுகாப்பு கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மாவட்ட காவல்துறையிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் திட்டமிட்டபடி சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு கே.சாமுவேல்ராஜ் வாழ்த்து தெரிவித்து முகநூலில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து சாதி ஆதிக்க வெறி கொண்ட சமூக விரோதிகளான கொங்கு நவீன்குமார், கொங்கு ராம், கொங்கு மோகன், காங்கேயம் வீரய்ய கவுண்டர் ஆகியோர் சாமுவேல்ராஜுக்  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், சாமுவேல்ராஜ் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி, நன்னெறிக்கு எதிராகவும், சமூக விரோதமாக தரக்குறைவான பதிவுகளை பதிந்துள்ளனர். மேலும், சாதி மறுப்பாளர்கள், சமத்துவ சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்களைப்பற்றி ஆபாசமாகவும், கொச்சைப்படுத்தியும் சமூக வலைதளங்களில் மோசமாகப் பதிவு செய்கின்றனர்.
திருப்பூர், பல்லடம் பகுதியை சேர்ந்த குணா என்பவர், நிவேதாவின் தந்தை சேகரை தொடர்புகொண்டு, மணமக்களை கொல்லப்போவதாகவும், கவுண்டர் சமூகத்தின் மானத்தை காக்க முன்வர வேண்டும் என்றும் அச்சுறுத்திய பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு கிளைச் செயலாளரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான இரா.திருமூர்த்தி, வழக்கறிஞர்கள் அருண், ராஜா, பாலமுருகன், செண்பகராமன், முருகன் உள்ளிட்டோர் குழுவாகச் சென்று, காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் திங்களன்று (நவ.13) புகார் அளித்தனர்.

அதில், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கும், உறுதுணையாக இருக்கிற சமூக ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளன. எனவே, சாமுவேல்ராஜ் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இணையதளத்தில் செயல்படும் சாதி ஆதிக்க சக்திகள் மீதும், சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர் வேல்முருகன்-நிவேதா மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply