திருப்பூர், நவ.14-
தமிழக சட்டசபை சபாநாயகர் ப.தனபால் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டங்கள் மூலம் அசராத  நிர்வாகத்தை அசைய வைத்திருக்கிறது. அவினாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ள நல்ல தண்ணீர் பெயரளவிற்கே வழங்கப்பட்டு வருகிறது. நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடிநீர் வழங்க வேண்டும். இதே போல் காட்டுவளவுக்கு மின் மோட்டார் வைத்து குடிநீர் வசதி, எரியாத தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டு இப்பகுதிக்கான பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்தது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கோரிக்கை மாநாடு, மறியல், தண்டோரா நடைபயணம் என தொடர்ச்சியாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டங்களில்போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கோரிக்கைகளை நிறைவேற்று வதற்காக வாக்குறுதி அளிப்பதும், பிறகு செய்து தராமல் மக்களை ஏமாற்றுவதும் தொடர் கதையாக இருந்தது. இந்த சூழலில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வார காலத்திற்குள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். தற்போது பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கி திங்களன்று அறிவிக்கப்பட்ட குடியிருக்கும் போராட்டம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. விடாப்பிடியாக போராட்டம் நடத்தப்பட்ட சூழ்நிலையில் அரசு நிர்வாகம் அடிபணிந்தது. காட்டுவளவுக்கு மின்மோட்டார் பொருத்தி நல்ல தண்ணீர் வசதி, பிச்சாண்டம்பாளையம் ஏடி காலனிக்கு அஸ்திவாரத்திற்கான குழி மட்டும் தோண்டப்பட்ட பொதுக்கழிப்பிட வேலை உடனடியாக தொடங்கி வேலைகள் நடைபெற்று வருகிறது. தெருவிளக்குகள் சரி செய்யப்படுகிறது, வடுகபாளையம் ஏடி காலனியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய பொதுக்கழிப்பிடத்தின் செப்டிக் டேங்க் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

வாக்குறுதி அளித்தால் போராட்டம் முடிந்துவிடும், பிறகு மீண்டும் போராட வரமாட்டார்கள் என்று அப்போதைக்கு அப்போது ஏதேனும் வாக்குறுதி அளித்துவிட்டு அதிகாரிகள் தட்டிக் கழித்தாலும், மார்க்சிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி தொடர்ந்து விடாப்பிடியாக போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருகிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் மரியாதையையும், வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: