கோவை,

கோவை அருகே தனியார் பள்ளியில் சக மாணவிகளிடம்  தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி 9ம் வகுப்பு மாணவி  மகாலட்சுமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் மகாலட்சுமி செட்டிபாளையம் பகுதியில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் மாணவி இன்று தனது தந்தை   மாரிமுத்து மற்றும் சமூக ஆர்வலர் மரீனா ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தார். அப்போது  பேசிய மாணவி  மகாலட்சுமி, தான் படிக்கும் சக்தி மெட்ரிக் பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் பள்ளியில் சேரும் கழிவுநீரையும் கற்களையும் மாணவ, மாணவிகளை கொண்டே அகற்றுவதாக  தெரிவித்தார். மேலும் பள்ளியில் சிறு குழந்தைகளுடன்  தமிழில் பேசியதற்காக அபராதம் விதிப்பதாகவும் , கடந்த வாரம்  தமிழில் பேசியதற்காக அபராதம் விதித்ததால் பேருந்தில் வர முடியாமல் நடந்தே வீட்டிற்கு வந்ததாக மாணவி மகாலட்சுமி தெரிவித்தார்.

பள்ளி நிர்வாகத்தின்  இது போன்ற நடவடிக்கைகள் குறித்தும் , எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் பெற்றோரை தரக்குறைவாக பேசுவதாகவும் ,  மகள் மனவேதனை அடைந்ததால் வேறு வழியில்லாமல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளதாகவும்  தனது மகளை போலவே பாதிக்கப்பட்ட மாணவிகள் வீட்டில் சொல்லகூட பயந்து கொண்டு  சொல்லாமல் இருப்பதாகவும் மாணவி மகாலட்சுமியின் தந்தை  மாரிமுத்து தெரிவித்தார்.

மாணவி மகாலட்சுமி குடும்பம் தனக்கு அறிமுகமானவர்கள் என்பதால் தன்னை தொடர்பு கொண்டு பள்ளியில் நடக்கும் சம்பவங்கள் குறித்தும் தெரிவித்ததாகவும் இதனையடுத்தே அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க அழைத்து வந்ததாக  சமூக ஆர்வலர் மரீனா தெரிவித்தார்.குறிப்பாக பள்ளியில் விளையாட்டு துறை ஆசிரியர் கார்த்திக் என்பவர் மாணவிகளிடம் அத்துமீறி நடத்து கொள்வதாகவும் , கடிதம் எழுதிவைத்து விட்டு   தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் மாணவி மகாலட்சுமி தன்னிடம் தெரிவித்ததால் ஆட்சியரிடம் புகார் அளிக்க அவர்களை அழைத்து வந்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் மரீனா தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: