திருப்பூர், நவ.14 –
பொங்கலூர் ஒன்றியம் கொடுவாயில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பொது மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுவாய் பொள்ளாச்சி சாலையில் டாஸ்மாக் கடை எண் 1938 அமைந்துள்ளது. இக்கடைஅமைந்திருக்கும் பகுதி மக்கள் குடியிருப்பாக இருப்பதுடன், பெண்களுக்கும், பள்ளிக் குழந்தைகளுக்கும், மக்களுக்கும் இடையூறாக உள்ளது. எனவே இக்கடையை அகற்றுமாறு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி
காரிகளுக்கு இப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். எனினும் அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாதர் சங்கம் சார்பில் பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் இக்கடையை அகற்ற, பாதிப்புகள் குறித்து புகார் எழுதி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளிக்கும்படியும், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியும் அரசு நிர்வாகம் அவ்வப்போது வாக்குறுதி அளிப்பதுடன் இக்கடையை இடம் மாற்றவோ, மூடவோ நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இக்
கடையை அகற்றும் வரை அப்பகுதியில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவதென மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி செவ்வாயன்று டாஸ்மாக் கடை முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

காவல்துறையினர் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்களின் எதிர்ப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மேலும் தொடர்ந்த டாஸ்மாக் கடையை அகற்ற அரசு நிர்வாகம் அலட்சியப்படுத்தினால் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் சிவசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பவித்ராதேவி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், நாட்ராயன், முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: