கோவை, நவ 14-
உதவி தொகை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுங்கள் என மாற்றுத்திறனாளி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்து முறையிட்டார். அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சோமனூர் பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி வர்கீஸ் (51). இவர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரனிடம் ஓர் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது : நான் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தேன். கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் முதுகுதண்டு பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் செயல்படாமல் சிரமப்பட்டு வருகிறேன். எனக்கு தெரசா என்ற மனைவியும் கல்லூரியில் படிக்கும் பெண்ணும் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன் எனது மனைவி விபத்தில் சிக்கி கால்முறிந்து படுத்த படுக்கையாக உள்ளார். இருவரையும் கவனிப்பதற்காக மகள் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டார். உடல் நலக்குறைவால் இருவரும் பணிக்கு செல்ல முடியவில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் குடும்பம் சிக்கி தவிக்கிறது. வருமானமின்றி சாப்பாட்டிற்கே வழியில்லாத நிலையில் அருகில் உள்ளவர்கள் உணவளித்து வருகின்றனர்.

இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கபட்டுள்ளோம். மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தில் உதவித்தொகை கோரி மனு அளித்து 3 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கை இல்லை. என்னுடைய குடும்ப நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவித்தொகை வழங்க வேண்டும். இல்லையெனில் என்னை கருணை கொலை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: