ஊனமுற்றோர் சட்ட விதிகளை மீறியுள்ள தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 1 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு தர்ணா போராட்டம் நடத்த மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி, துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் ஊனமுற்றோருக்கான புதிய உரிமைகள் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு இயற்றியது. புதிய சட்டத்திற்கான மத்திய அரசின் விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு ஏதுவாக, சட்டம் இயற்றப்பட்ட 6 மாத காலத்திற்குள்  சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் இந்த சட்டத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி, செயல்படுத்த வேண்டுமென்று ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டம் விதித்துள்ளது.

ஆனால், தமிழக அரசு இதுவரை இச்சட்டத்திற்கான விதிமுறைகளை அரசிதழில் வெளியிடாமல் கிடப்பில் போட்டுள்ளது.   இதனால், ஊனமுற்றோருக்கான புதிய உரிமைகள் சட்டம் தமிழகத்தில் அமலாகாத நிலைமை உள்ளது.  6 மாத காலத்திற்குள் மாநில அரசு விதிமுறைகளை உருவாக்கி செயல்படுத்த வேண்டுமென்ற புதிய உரிமைகள் சட்ட விதியை  தமிழக அரசு மீறியுள்ளது. இது, மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மீது, தமிழக அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது.

தமிழக அரசின் இந்த மெத்தனப் போக்கை, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக புதிய உரிமைகள் சட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க எமது சங்கம் வலியுறுத்துகிறது.

 டிச. 1ல் தர்ணா
இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் தர்ணா போராட்டங்கள் நடத்தி, கோரிக்கை மனுக்கள் அளிக்க தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்துள்ளது.
சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்று முடிந்த எமது அகில இந்திய அமைப்பான ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் 2-வது அகில இந்திய மாநாடு, இதே கோரிக்கைக்காக அந்தந்த மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த வேண்டுமென தீர்மானம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: