குறித்த காலத்துக்கு முந்தைய சினைப்பை செயலிழப்பு என்பதே பிரீமெச்சூர் ஓவரியன் ஃ பெயிலியர் எனப்படுகிறது.  இது பெண்களுக்கு ஏற்படும் உடலியல் ரீதியான நிலைப்பாடாகும். சினைப்பைகளில் வயது சார்ந்து கரு முட்டைகளின் எண்ணிக்கை குறையும் நிலை இவ்வாறு கூறப்படுகிறது. இது இளம் வயதில் கருத்தரித்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் (40 வயதுக்கு குறைவாக).  பூப்படைந்த அத்தனை பெண்களும், மெனோபாஸ் காலகட்டத்தையும் கட்டாயம் சந்தித்துதான் ஆகவேண்டும். மெனோபாஸ் என்பது இயற்கையான ஒருசெயல். 40 முதல் 45 வயதுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் மாதவிலக்கு முற்றுப்பெறலாம். மெனோபாஸின் அத்தனை அறிகுறிகளையும் சுமந்துகொண்டு, 40 வயதுக்குக் குறைவான பெண்களைப் பாதிக்கிற பிரச்னைதான் ‘ப்ரீமெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர்’.

மெனோபாஸ் வயதை நெருங்கும் பெண்களுக்கு சினைப் பைகளின்  செயல்திறன் குறையும். மாத விலக்கு சுழற்சி முறையற்றுப் போகும். ஒரு கட்டத்தில் மாதவிலக்கு வருவது நின்று போகும். அதன் பிறகு இவர்கள் கருத்தரிக்கவாய்ப்பில்லை. ஆனால், இத்தகைய பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரு முட்டைகளின் எண்ணிக்கை குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கும்.  இத்தகைய பெண்களுக்கு 30 வயதிலேயே கரு முட்டைகள் இல்லாத நிலை ஏற்படுகிறது.

சமூக மற்றும்பொருளாதார மாற்றத்திற்கான நிறுவனம் (ஐஎஸ்ஈசி) அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், 4 சதவீத இந்தியப் பெண்கள் 29 முதல் 34 வயதிற்குள் மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் நிலையைச் சந்திப்பதாக தெரியவந்துள்ளது. 35 முதல் 39 சதவீத பெண்களைப் பொருத்தவரை இது 8 சதவீதமாக காணப்படுகிறது.

இது குறித்து சென்னை நோவா ஐவிஐ  கருத்தரிப்பு மைய    ஆலோசகர் டாக்டர் மதுப்பிரியா  கூறுகையில், “சினைப்பைகளின் செயல்பாடு குறையும் போது அவை சராசரியான அளவிலான ஈஸ்ட்ரோஜோன்  ஹார்மோன்களை சுரப்பதில்லை.  மேலும் கரு முட்டைகளை குறித்த காலத்தில் வெளிவிட முடியாத நிலை ஏற்பட்டு கருத்தரிப்பதில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். புகைபிடித்தல்,  கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், சினைப்பை அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளுதல், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தல் . குடும்பத்தில் பரம்பரையாக  சினைப்பை செயலிழப்பு போன்றவை இளம்வயதில் கருமுட்டைகள் குறைவதற்கு காரணங்களாக அமைகின்றன.  35 வயதுக்கு குறைவான, கருத்தரிக்க இயலாத பெண்களில்  1 முதல் 2 சதவீத பெண்களுக்கு சினைப்பையில் குறைந்த முட்டைகள் உள்ளன அல்லது முட்டைகளே இல்லை.” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.