புதுதில்லி;
தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் வைத்துள்ள கோரிக்கை தொடர்பாக, மத்திய அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் பேரறிவாளன். பின்னர் அவரது தண்டனை உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனினும் 26 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உடல்நலம் குன்றியுள்ள தந்தை குயில்தாசனைக் கவனித்துக் கொள்வதற்காக, அண்மையில்தான் அவருக்கு 2 மாத காலம் பரோல் வழங்கப்பட்டது. அது முடிந்ததும் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எந்த வகையைச் சேர்ந்தது; அது எங்கிருந்து பெறப்பட்டது என்று இப்போது வரை உறுதிசெய்யப்படவில்லை. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியை ஆராய அமைக்கப்பட்ட எம்.டி.எம்.ஏ.(Multi Disciplinary Monitoring Agency) ) என்ற சிறப்பு விசாரணை முகமையும், தனது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை.

அவ்வாறிருக்க, பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரியால்தான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்று சிபிஐ எவ்வாறு முடிவுக்கு வந்தது? என்று ஏற்கெனவே கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தன. இதுதொடர்பாக பேரறிவாளன் மனு ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், இந்த விவரங்களை குறிப்பிட்டிருந்த பேரறிவாளன், சிபிஐ-யில் தனது வாக்குமூலம் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிபிஐ அதிகாரி வி. தியாகராஜன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.“2 பேட்டரிகள் எந்த நோக்கத்துக்காக வாங்கப்பட்டது என்பது குறித்து தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது என்று பேரறிவாளன் கூறியதை நான் பதிவு செய்யவில்லை; இந்த வாக்குமூலம் பேரறிவாளனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க காரணமாகி விடும் என்பதாலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யும் நோக்கத்தையே இல்லாமல் செய்துவிடும் என்பதாலும் இதை நான் பதிவு செய்யவில்லை” என்று தியாகராஜன் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி வழக்கின் முக்கியக் குற்றவாளியான சிவராசன், எல்டிடிஇ-யின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான பொட்டு அம்மானுக்கு அனுப்பிய ஒயர்லெஸ் செய்தியில், ‘நான் (சிவராசன்), தனு, சுபா ஆகிய மூவர் தவிர கொலைச் சதி வேறு ஒருவருக்கும் தெரியாது’ என்று குறிப்பிட்டு இருந்ததையும் தியாகராஜன் சுட்டிக்காட்டினார். ‘எதற்காக 2 பேட்டரிகள் வாங்கப்பட்டன என்பது தனக்குத் தெரியாது’ என்று பேரறிவாளன் கூறியது உண்மைதான் என்பதற்கு சிவராசனின் ஒயர்லெஸ் செய்தியே சாட்சி என்றும் தெரிவித்தார்.

மேலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவே தற்போது தானாக முன்வந்து, தன்னால் நீக்கப்பட்ட பேரறிவாளன் வாக்குமூலத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறினார்.
இந்நிலையில், செவ்வாயன்று இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான பேரறிவாளன் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “வெடிகுண்டைத் தயாரித்த குற்றவாளி இலங்கைச் சிறையில் இருக்கிறார்; தற்போதுவரை அவர் விசாரிக்கப்படவே இல்லை; ஆனால், அந்த வெடிகுண்டுக்கு 2 பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தார் என்று ஒருவர் அவரின் இளம் வயதிலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு வருகிறார்” என்று குறிப்பிட்டார்.
“பேரறிவாளன் வாங்கித் தந்த பேட்டரிகள்தான், வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டது என்று சொல்வதே கூட யூகம்தான்” என்றும் வாதிட்டார்.

பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்பது தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டதுடன் இவ்வழக்கின் மறுவிசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: