முகப்பேரில் வசிப்பவர் கணேசன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆவின் பால்பண்ணை சாலையில் பட்டரைவாக்கத்தில் ஜி.கே. ஆட்டோமொபைல் என்ற உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு 17 தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். திங்கட்கிழமை இரவுப் பணியில் 10 பேர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் செவ்வாயான்று அதிகாலை 5 மணியளவில் திடீரென நிறுவனத்தின் ஒரு மூலையில் இருந்து புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. உடனடியாக தொழிலாளர்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கும், தீ அணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, வில்லிவாக்கம் பகுதிகளில் இருந்து 2 வாகனங்களில் வந்த தீ அணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

Leave A Reply