கோவை, நவ.13-
வனவிலங்குகள் மற்றும் காட்டுப்பூச்சிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் வால்பாறை பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்திடக்கோரி வாலிபர் சங்கம் மற்றும் சிஐடியு தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஞாயிறன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், வால்பாறையிலுள்ள தேயிலை எஸ்ட்டேட்டுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான போதிய வசதிகள் இல்லாததால் உடல்நலக்கோளாரோ அல்லது வனவிலங்குகள் தாக்குதல், பாம்பு, பூச்சிகள் கடித்தால் பாதிக்கப்பட்டவர்களை பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கே கொண்டு வர வேண்டியுள்ளது. இவ்வாறு நீண்டதூரம் பயணம் செய்து அழைத்து வரப்படுவதால் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய அவல நிலையை போக்க வேண்டும். மலைப்பகுதி என்பதால் அரசு பாரபட்சம் காட்டக் கூடாது. வால்பாறை அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்,மயக்க மருத்துவர் மற்றும் போதிய செவிலியர், உதவியாளர், துப்புரவாளர் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு தேயிலை தோட்ட தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஞாயிறன்று பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுசெயலாளர் பி.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தில் சிஐடியு சங்க நிர்வாகிகள் கே.ராஜ், பி.பாலகிருஷ்ணன், ஆர்.மணிகண்டன் மற்றும் வாலிபர் சங்கத்தின் வால்பாறை தலைவர் முகமது முனவர், செயலாளர் எம்.அசாருதீன், கே.முகிலன், ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கையெழுத்துகளை பெற்று அமைச்சர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இவ்வமைப்பினர் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: