ரூபாய் நோட்டுகளில் காந்தியின்  பெயருக்கு முன்பு மகாத்மா என்று அச்சிட தடை கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக  ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘ரூபாய் நோட்டுகளில்  காந்தியின் படத்திற்கு கீழ்   மகாத்மா காந்தி என அச்சிடப்பட்டுள்ளது. அவர் எந்த சூழ்நிலையிலும் தன்னை மகாத்மா என்று கூறிக்கொள்ளவில்லை. அவர் கைப்பட எழுதிய கடிதங்களில் மகாத்மா என்று அவர் கையெழுத்திடவில்லை. அவர் தனது பெயரை மகாத்மா என்று பதிவும் செய்யவில்லை.

எனவே, எந்த அடிப்படையில் ரூபாய் நோட்டுகளிலும்,  நாணயங்களிலும், தபால் முத்திரைகளிலும் மகாத்மா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த வார்த்தையை பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வருமாறு மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை திங்களன்று (நவ. 13) விசாரித்த  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு,  அரசமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டே ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி என்று அச்சிடப்படுகிறது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கைத் தொடுத்ததன் மூலம் நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகக் கூறி மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

Leave A Reply