திருப்பூர், நவ.13-
திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் உரிய உரிமம் இன்றி முறைகேடாக மணல் ஏற்றி வந்த 4 லாரிகளை பிடித்து வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் முறைகேடாக மணல் ஏற்றி வரும் வாகனங்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தனர். இந்நிலையில், கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் இருந்து உரிய அனுமதி இன்றி ஏற்றி வந்த நான்கு லாரிகளை அவிநாசி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் அவிநாசி பகுதியில் பிடித்தனர். மேலும், திருப்பூர், பல்லடம் மற்றும் ஊத்துக்குளி பகுதிகளில் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று அதிகாலை ஊத்துக்குளி காங்கயம் சாலையில் 4 பெரிய லாரிகளில் உரிய அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த வாகனங்களை வட்டாட்சியர் அருணா தலைமையிலான வருவாய்த் துறையினர் பிடித்தனர். அப்போது, அவர்களிடம் உரிய ஆவணங்கள் இன்றி முறைகேடாக மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்வரன்குமார் பல்லடம், பொங்கலூர் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதியில் சனியன்று இரவு சோதனையில் ஈடுபட்டிருந்தபோது 2 மணல் லாரி மற்றும் ஒரு கிராவல் மண் லாரியை பறிமுதல் செய்தனர். திருப்பூர் சார் ஆட்சியர் வளாகத்தில் இந்த வாகனங்களை நிறுத்தி வைத்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: